ஸ்டாலின் ஆட்சி அமைப்பது உறுதி: பிரேமலதா திட்டவட்டம் 

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின், குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதி, தி.மு.க.,வேட்பாளர் பன்னீர்செல்வத்தை ஆதரித்து தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

தொகுதியில் அமைச்சர் பன்னீர்செல்வம் பெரும் முயற்சியில் பல திட்டங்கள் கொண்டு வந்தார்

சி.என்., பாளையத்தில் பலா பழம் ஆராய்ச்சி மற்றும் மதிப்பு கூட்டு மையம் கட்டுமானம் மற்றும் ஓட்டேரியில் கெடிலம் ஆற்றில் ரூ.16.5 கோடி மதிப்பில் புதிய உயர்மட்ட பாலம் கட்டுமான பணி நடக்கிறது.

திருவந்திபுரம், தேவநாத சுவாமி கோவிலில், ரூ.70 லட்சம் மதிப்பில் மின் விளக்குள், பல பகுதிகளில் புதிய ரேஷன் கடைகள், பயணிகள் நிழற்குடைகள் கட்டி தரப்பட்டுள்ளன.

45 ஆயிரத்து 545 பேருக்கு, மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. பல மகளிர் தினமும் 'விடியல்' பயணம் செய்து வருகின்றனர். 11 ஆயிரத்து 135 பயனாளிகள், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் பயனடைந்துள்ளனர்.

ரூ.10.5 கோடி மதிப்பில் வேளாண்துறையில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. ரூ.8.39 கோடி மதிப்பில் தோட்டக்கலை துறை மூலம் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஊரக வளர்ச்சி துறை சார்பில், 4 ஆயிரத்து 664 திட்டப்பணிகள், நிறைவேற்றப்பட்டுள்ளன. கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட முகாம் மூலம், 15 ஆயிரத்து 145 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

இந்த முறை ஸ்டாலின் ஆட்சி அமைப்பதும், குறிஞ்சிப்பாடியில் பன்னீர் செல்வம் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று அமைச்சாரவதும் உறுதி. கருணாநிதிக்கும், விஜயகாந்திற்கும், 50 ஆண்டு கால உறவு.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement