போதமலை மக்களின் நுாற்றாண்டு கால கனவை நிறைவேற்றியது தி.மு.க., அரசு: அமைச்சர் பேச்சு
ராசிபுரம் :நாமக்கல் மாவட்டம், வெண்ணந்துார் பஞ்., யூனியனுக்கு உட்பட்ட கீழூர் ஊராட்சியில் போதமலை அமைந்துள்ளது. இங்கு, கீழூர், மேலுார், கெடமலை ஆகிய, மூன்று மலைக்கிராமங்கள் உள்ளன. அதில், 3,000-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், 2,000 ஹெக்டேர் பரப்பளவில் சாமை, கேழ்வரகு, கம்பு, திணை மற்றும் அரிசி உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே, கடந்த, 1996-ல், தி.மு.க., ஆட்சி காலத்தில் தான், இந்த மலைக்கிராமங்களுக்கு முதல்முறையாக மின்சார வசதி செய்து தரப்பட்டது. இருப்பினும், சுதந்திரம் அடைந்தது முதல் இப்பகுதிகளுக்கு முறையான சாலை வசதி இல்லாமல் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வந்தனர். ராசிபுரம் தொகுதி, தி.மு.க., வேட்பாளர் அமைச்சர் மதிவேந்தன், போதமலை பகுதியில், நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
போதமலை கிராமங்களுக்கு சாலை வசதி இல்லாததால், பலர் மலையை விட்டு இறங்கி அடிவார பகுதிகளில் குடியேறும் நிலை ஏற்பட்டது. மக்களின் இந்த கஷ்டத்தை உணர்ந்து, முதல்வர் ஸ்டாலின், தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி போதமலைக்கு சாலை அமைக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தார். தற்போது, வடுகம் முதல் கீழூர் வழியாக மேலுார் வரை, 21.17 கி.மீ., தொலைவிற்கும், புதுப்பட்டி முதல் கெடமலை வரை, 9.9 கி.மீ., தொலைவு என, மொத்தம், 31 கி.மீ., துாரத்திற்கு தார்ச்சாலை அமைக்க, தமிழக அரசு சார்பில், 140 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் இறுதி நிலையை எட்டியுள்ளன. மலைவாழ் மக்களின் நலனுக்காக, தி.மு.க., அரசு எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறது. எனவே, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை, மீண்டும் வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மலைவாழ் மக்கள், அமைச்சர் மதிவேந்தனுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பளித்தனர். வெண்ணந்துார் ஒன்றிய, தி.மு.க., செயலாளர் துரைசாமி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளானோர் கலந்துகொண்டனர்.
மேலும்
-
பதுக்கி வைக்கப்பட்டிருந்த 56 மதுபாட்டில்கள் பறிமுதல்
-
தயார் நிலையில் ஓட்டு சாவடிக்கு தேவையான பொருட்கள்
-
வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
-
சூலூரில் பூத் சிலிப்புகள்: 90 சதவீதம் வினியோகம்
-
செல்வநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
-
ஆட்டம் காணும் அடிப்படை பிரச்சனைகள் தீர்வு காண என்ன வழி! கனவு நனவாகுமா?