ஆட்டம் காணும் அடிப்படை பிரச்சனைகள் தீர்வு காண என்ன வழி!  கனவு நனவாகுமா?

பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையம் தொகுதியில் காலம், காலமாக நீடித்து வரும் பிரச்சனைகளுக்கு, வரும் ஆட்சியாளர்களாவது தீர்வு காண வேண்டுமென விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் பெரிய தொகுதியான கவுண்டம்பாளையத்தில், 4 லட்சத்து, 20 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இது கோவை மாநகராட்சியின் வடக்கு பகுதி, எஸ்.எஸ்.குளம் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியங்களை உள்ளடக்கியது. மலையோர கிராமங்களை அதிகமாக கொண்ட இத்தொகுதியில் மனித, வனவிலங்கு மோதல் பிரச்சனை கடந்த, 10 ஆண்டுகளாக பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு, கேரளாவில் இருந்து சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு இடம்பெயரும் காலங்களில் மட்டுமே காட்டு யானைகளின் தொந்தரவு இருந்தது. ஆனால், தற்போது கோவை வடக்கு புறநகர் பகுதிகளில் நிரந்தரமாக காட்டு யானைகள் தங்கி, தினசரி மலையோர கிராமங்களில் உள்ள வேளாண் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

வேட்டை தடுப்பு காவலர்களை பணியில் முழுமையாக ஈடுபடுத்தினாலும், காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் ஊடுருவல்களை முழுமையாக தடுக்க முடியவில்லை. தற்போது, காட்டுப் பன்றிகளின் எண்ணிக்கையும் அபரிமிதமாக அதிகரித்து உள்ளது. வன எல்லையை விட்டு வெளியே வரும் காட்டு பன்றிகளை சுட்டுக் கொல்ல சட்டத்தில் வழி இருந்தும், அதை செயல்படுத்த வனத்துறையினர் ஏனோ தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் சின்னதடாகம் வட்டாரத்தில் வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

இரண்டாவது முக்கிய பிரச்சினையாக மேட்டுப்பாளையம் ரோட்டில் அபரிமிதமாக நிலவும் போக்குவரத்து நெருக்கடியை கூறலாம். இங்கே ஏற்கனவே கவுண்டம்பாளையம், ஜி.என்.மில்ஸ் பிரிவு, பெரியநாயக்கன்பாளையம் ஆகிய இடங்களில் உயர்மட்ட மேம்பாலங்கள் கட்டப்பட்டதால், போக்குவரத்து நெருக்கடிக்கு ஓரளவு விடிவு ஏற்பட்டது. ஆனாலும், நரசிம்மநாயக்கன்பாளையம், தொப்பம்பட்டி பிரிவு, துடியலூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை, மாலை பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதே போல மேட்டுப்பாளையம் ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அதிக அளவு உள்ளதால், அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகின்றன. ஆக்கிரமிப்புகளை அகற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு செய்து, பெயரளவில் மட்டுமே ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறது.

அசோகபுரம், குருடம்பாளையம், அத்திப்பாளையம், கீரணத்தம், சோமையம்பாளையம், கொண்டயம்பாளையம், பன்னீர்மடை, நஞ்சுண்டாபுரம் ஊராட்சிகள், நரசிம்மநாயக்கன்பாளையம், இடிகரை பேரூராட்சிகளின் குப்பைகளை அகற்ற, திடக்கழிவு மேலாண்மை செய்ய, பொருத்தமான இடம் இல்லாததால் குப்பை பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

மேலும், கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட பெரும்பாலான பேரூராட்சி, ஊராட்சிகளில் பெருகிவரும் குடியிருப்புகளால் போதுமான அளவு குடிநீர் வினியோகம் செய்ய முடியாமல் உள்ளது. எனவே விநியோகம் செய்யப்படும் பில்லூர் குடிநீரின் அளவை அதிகரிக்க வேண்டும்.

பாக்ஸ் செய்தி

பிரச்சனைகளுக்கு தீர்வு உண்டு

வனவிலங்குகள், மலையோர கிராமங்களுக்குள் புகாமல் தடுக்க, யானைகள் உள்ளே நுழைய முடியாதவாறு, கர்நாடகாவில் அமைக்கப்பட்டது போல பெரிய தண்டவாளங்களை வன எல்லை பகுதியில் தொடர்ச்சியாக நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மூத்த விவசாயிகள் கூறினர். மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை இரும்பு கரம் கொண்டு அகற்ற வழி உண்டு. அதிகாரிகள் மனது வைத்தால் போதும். அசோகபுரம், குருடம்பாளையம், பன்னீர்மடை, நஞ்சுண்டாபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளை ஒருங்கிணைத்து, அங்கு சேரும் குப்பைகளை ஒரே இடத்தில் குவித்து, அதிநவீன திடக்கழிவு மேலாண்மை செய்வதன் வாயிலாக குப்பை பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். துடியலூர், தொப்பம்பட்டி பிரிவு, நரசிம்மநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை ஒருங்கிணைத்து நீண்ட தூரத்துக்கான உயர்மட்ட மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் எதிர்காலத்தில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு ஏற்படும்.

Advertisement