நேர்மையான முறையில் மீண்டும் விசாரணை: பிரியதர்ஷினி மட்டூ வழக்கில் நீதிபதி உறுதி

1

புதுடில்லி:கடந்த, 1996ல், பிரியதர்ஷினி மட்டூ என்ற, 25 வயது பெண் கற்பழித்து, கொல்லப்பட்ட வழக்கில் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என சந்தோஷ்குமார் சிங் என்ற ஆயுள் தண்டனை குற்றவாளியின் கோரிக்கை, மறுசீராய்வு வாரியத்தால் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், 'அவரது கோரிக்கை நேர்மையான முறையில் விசாரிக்கப்படும்' என, டில்லி உயர் நீதிமன்றம் நேற்று உறுதியளித்தது.

கடந்த, 1996ல், சட்ட மாணவியாக இருந்த பிரியதர்ஷினி மட்டூ என்ற ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த பெண், சந்தோஷ்குமார் சிங் என்ற சட்ட மாணவரால் கற்பழிக்கப்பட்டு, கொல்லப்பட்டார்.

அந்த வழக்கை விசாரித்த, சி.பி.ஐ., சரிவர ஆதாரங்களை அளிக்கவில்லை என கூறி, சந்தோஷ்குமார் சிங் என்ற முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியின் மகனை, விசாரணை நீதிமன்றம் விடுவித்தது.

அதை எதிர்த்து, நாடு முழுவதும் எழுந்த கண்டன குரல்களை அடுத்து, 2006ல் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டும், அந்த தண்டனையை உறுதி செய்தது.

இந்நிலையில், அந்த காலத்தில் நடந்த தந்துாரி கொலை வழக்கில் இருந்து சுஷில்குமார் என்பவர், 23 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பின் விடுவிக்கப்பட்டார். அதுபோல, ஜெசிக்கா லால் என்பவரை கொன்ற வழக்கிலிருந்து குற்றவாளியும், முன்கூட்டியே விடுவிக்கப்பட்டார்.

இவர்கள் இருவரையும் போல, தன்னையும் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என கோரி, சந்தோஷ் குமார் சிங் என்ற அந்த ஆயுள் தண்டனை குற்றவாளி, மறுசீராய்வு வாரியத்தில் மனு செய்தார். இரண்டு முறையும், அவரின் மனு நிராகரிக்கப்பட்டது.

அந்த விவரம், நேற்று நீதிபதி அனுாப் ஜே பாம்பானியிடம், மூத்த வழக்கறிஞர் மோஹித் மாத்துார் வழியாக தெரிவிக்கப்பட்டது.

அதை கேட்ட நீதிபதி, நேற்று பிறப்பித்த உத்தரவு:

வழக்கமாக இதுபோன்ற கொடுமையான குற்றம் இளைத்த நபரை முன்கூட்டியே விடுதலை செய்ய மறு சீராய்வு வாரியம் மறுப்பது வழக்கமான ஒன்று தான். எனினும், குற்றவாளிக்கு இன்னமும் வாழ்நாள் உள்ளது. எனவே, அவர் தான் செய்த குற்றத்திற்காக வருந்தி, மீண்டும் வாழ வாய்ப்பு கேட்டுள்ளார்.

ஏற்கனவே, 31 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்ட அவரை வாழ இனிமேலாவது அனுமதிக்க வேண்டும். எனவே, அவரின் மனு மீது நேர்மையான முடிவு விரைவில் எடுக்கப்படும்.

இவ்வாறு நீதிபதி கூறினார்.

Advertisement