சிறுசேரியில் 65 மாடி குடியிருப்புக்கு அனுமதி மறுப்பு: 39 மாடியாக குறைத்தது தனியார் நிறுவனம்

சென்னை:சென்னையை அடுத்த சிறுசேரியில், 65 மாடி கட்டுவதற்கான உருவாக்கப்பட்ட தனியார் நிறுவன குடியிருப்பு திட்டத்தின் உயரம், 39 மாடியாக குறைக்கப்பட்டு உள்ளது.

சென்னை பெருநகர் பகுதிக்கான இரண்டாவது முழுமை திட்டத்தின் அடிப்படையில், கட்டடங்களின் உயர கட்டுப்பாடு, 2008ல் தளர்த்தப்பட்டது.

இதில், வானிலை ஆய்வு மையம், விமான போக்குவரத்து துறை ஆகியவற்றின் தடையின்மை சான்று அடிப்படையில், உயரமான கட்டடங்கள் கட்டப்படுகின்றன.

இதன் அடிப்படையில், பழைய மாமல்லபுரம் சாலை, பெரம்பூர், அண்ணாசாலை போன்ற இடங்களில் அதிக உயரமாக குடியிருப்பு, அலுவலக கட்டடங்கள் கட்டப்படுகின்றன. சென்னையில் அதிகரித்து வரும் குடியிருப்பு தேவைக்கு, இது புதிய தீர்வாக அமைந்துள்ளது.

உயரமான கட்டடங்களில் வீடு வாங்க மக்களும் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த வகையில், அதிகபட்சமாக, 27 முதல் 45 மாடி வரையிலான கட்டடங்கள் கட்டப்படுகின்றன.

இந்நிலையில், இமாமி ரியாலிட்டி நிறுவனம் சார்பில், சென்னை பழைய மாமல்லபுரம் சாலை சிறுசேரியில், 656 அடி உயரத்தில், 65 மாடிகள் கொண்ட குடியிருப்பு கட்ட திட்டமிட்டது. இதற்காக திட்ட அனுமதி பெற, உரிய துறைகளை அந்நிறுவனம் அணுகியது.

ஆனால், விமான போக்குவரத்து துறையில், 419 அடி உயரத்துக்கு அதாவது, 39 மாடி வரையிலான கட்டடம் கட்ட மட்டுமே தடையின்மை சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.

இதனால், பழைய மாமல்லபுரம் சாலையில், 65 மாடிகள் வரை திட்டமிடப்பட்ட கட்டடம் தற்போது, 39 மாடிகளாக குறைக்கப்பட்டு உள்ளது.

சாலை அகலம், மனை பரப்பு போன்ற விதிகள் சாதகமாக இருந்தாலும், விமான போக்குவரத்து துறை கட்டுப்பாடுகள் காரணமாக, சென்னையில், 65 மாடி கட்டடம் கட்டுவது தடுக்கப்பட்டு உள்ளதாக நகரமைப்பு வல்லுனர்கள் தெரிவித்தனர்.

***





Advertisement