ராஜா அன்பழகன் போராட்டம்

தி.நகர்: லோக்சபா தொகுதி மறுவரையறை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தி.நகர் தி.மு.க., வேட்பாளர் ராஜா அன்பழகன் மற்றும் கட்சியினர், கருப்பு சட்டை அணிந்து, கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தி.நகர் தொகுதி தி.மு.க., வேட்பாளர் ராஜா அன்பழகன் , அசோக் நகர் 135வது வார்டில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, லோக்சபா தொகுதி மறுவரையறை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ராஜா அன்பழகன் மற்றும் கட்சி நிர்வாகிகள், கருப்பு சட்டை அணிந்து பிரசாரம் செய்தனர்.

தொடர்ந்து, ராஜா அன்பழகன் தலைமையில், 100க்கும் மேற்பட்ட தி.மு.க.,வினர் தி.நகர் உஸ்மான் சாலையில் ஊர்வலமாக சென்று, 'இந்த சட்டத் திருத்தத்தால், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் பாதிக்கப்படும்' எனக்கூறி, தி.நகர் பேருந்து நிலையம் அருகே கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், பகுதி செயலர்கள் ஏழுமலை, மணி, வட்ட செயலர்கள் மாரி, முரளி, வெல்டிங் ராஜா, கிருஷ்ணமூர்த்தி, செல்வகுமார், செந்தில்குமார், உதயசூரியன், தட்சன் ஹரிஹரன், கமலஹாசன், சக்திவேல், லட்சுமி காந்தன், ஜெயகுமார், மற்றும் தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜானகிராமன் ஆகியோர் பங்கேற்றனர்.

இதுகுறித்து ராஜா அன்பழகன் கூறுகையில், ''தி.மு.க., தலைவர் ஸ்டாலினை தொடர்ந்து, நாங்களும் போராட்டம் நடத்தினோம். தொகுதி மறுவரையறை என்ற பெயரில், தன் அதிகார வரம்பைத் தாண்டி, மத்திய அரசு தென் மாநிலங்களை வஞ்சிக்கும் நோக்கில் இந்த சட்டத்திருத்தத்தைக் கொண்டு வர முயற்சிக்கிறது,'' என்றார்.

Advertisement