' நான் உங்க ஊர் பொண்ணுங்க...' தி.மு.க. வேட்பாளர் 'சென்டிமென்ட்'

அவிநாசி: அவிநாசி தொகுதி தி.மு.க. வேட்பாளர் டாக்டர் கோகிலாமணி அவிநாசி ஒன்றியத்தில், பட்டறை, எஸ்.மேட்டுப்பாளையம், எஸ்.கே.புதுார், கந்தம்பாளையம், செல்வபுரம் ஏ.டி. காலனி, எம்.நாதம்பாளையம், வெள்ளியம்பாளையம், ஆட்டையாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார்.

அப்போது, வேட்பாளர் கோகிலாமணி பேசியதாவது:

உங்கள் ஊர் பெண்ணான எனக்கு உங்கள் மகளாக, சகோதரியாக உங்கள் வீட்டுப் பெண்ணாக நினைத்து உதயசூரியன் சின்னத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். தொகுதி பக்கமே எட்டிப் பார்க்காத ஒரு எம்.எல்.ஏ.வை வைத்துக்கொண்டு அ.தி.மு.க. கோட்டை என கூறுவது மக்கள் ஏற்க மாட்டார்கள்.

என்னை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுத்தால், மக்களுக்காக எந்நேரமும் சேவை செய்வேன். தமிழக முதல்வரால் உங்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு ஓட்டு கேட்க வந்துள்ளேன். நானும் அவிநாசி தொகுதியை சேர்ந்தவள் தான். இங்கு என்ன வளர்ச்சி உள்ளது, என்ன கஷ்டம் மக்கள் படுகிறார்கள் என்பது எனக்கு தெரியும். உங்களுடைய கஷ்டம் என்னவென்று நான் நன்கு அறிவேன்.
உங்களின் தேவைகளை உடனுக்குடன் செய்வதற்கும், இந்த பகுதிக்கு என்னென்ன திட்டங்கள் வேண்டும் என்பதை அறிந்து நிறைவேற்றவும் நான் உங்களுடன் இருக்கிறேன். உங்களுடைய பிரச்னைகளை, தேவைகளை பூர்த்தி செய்ய நிச்சயம் பாடுபடுவேன். இந்த முறை எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்


இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தில், ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாஷ், பழனிசாமி, கலை இலக்கியப் பகுத்தறிவு பேரவை வடக்கு மாவட்ட அமைப்பாளர் சிடிசி ரமேஷ், காந்திமதி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Advertisement