புற்றுநோய் பாதித்த சிறுவன் சி.பி.எஸ்.இ., தேர்வில் 96.6%

புதுடில்லி,புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவன், நேற்று முன்தினம் வெளியான சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில், 96.6 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளார். அவரை பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டினர்.

டில்லியின் மெஹ்ராலி என்ற இடத்தை சேர்ந்தவர் ஆரவ், ஏழாம் வகுப்பில் படிக்கும் போதே, அவரின் முதுகெலும்பில் புற்றுநோய் இருப்பது தெரிந்தது. அதையடுத்து, அந்த நோய்க்கான சிகிச்சையை எடுத்துக் கொண்டே, படிப்பிலும் முதல் மாணவனாக திகழ்ந்தார்.

நேற்று முன்தினம் வெளியான சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவில், அவர், 96.6 சதவீத மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றார். அவரிந் தந்தை அஜய் அரோரா டாக்டராக உள்ளார்.

அவர் கூறும் போது,''ஏழாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே மருத்துவமனையும், வீடுமாகத் தான் ஆரவ் இருக்கிறான். எனினும், சிகிச்சையின் போது படிப்பதையும், ஆன்லைன் வகுப்புகளை கேட்பதிலும் ஆர்வமாக இருந்தான். இப்போது அவன், பத்தாம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்துள்ளதை பார்க்கும் போது, மகிழ்ச்சியாக உள்ளது,'' என்றார்.

அந்த சாதனை மாணவரை, சக மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர் பாராட்டினர். விஞ்ஞானியாக வேண்டும் என்பது இந்த சிறுவனின் விருப்பம்.

Advertisement