வார்டு தோறும் மருத்துவ கிளினிக் இலவசமாக நடத்தப்படும்: தமிழிசை

1

மயிலாப்பூர்: ''வார்டுதோறும் மருத்துவ கிளினிக் இலவசமாக நடத்தப்படும்,'' என, பா.ஜ., வேட்பாளர் தமிழிசை வாக்குறுதி அளித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணி, பா.ஜ., வேட்பாளர் தமிழிசை, மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன், பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் நேற்று முன்தினம், ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, மீனவ மக்கள் சார்பில், இரண்டு அடுக்குமாடி உயரத்திற்கு கட்டப்பட்ட இளநீர் மாலையை, ராட்சத கிரேன் வாயிலாக அவருக்கு சூட்டி, உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

அப்போது, மீனவ மக்களிடையே அவர் பேசியதாவது:

பழைய மீனவ குடியிருப்புகளை இடித்து, பிரதமர் வீடு திட்டத்தின் கீழ் புதிதாக கட்டித்தரப்படும். மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க, மீனவ பிரதிநிதிகளை டில்லிக்கு அழைத்துச் சென்று, மோடியுடன் பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மயிலாப்பூர் தொகுதியில் உள்ள ஒவ்வொரு வார்டிலும், மருத்துவ கிளினிக் இலவசமாக நடத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரசாரத்தில் பா.ஜ., மாநில செயலரும், மயிலாப்பூர் சட்டசபை பொறுப்பாளருமான சதீஷ்குமார், அ.தி.மு.க., பகுதி செயலர் ஜெயச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Advertisement