மக்களுடன் நிற்கும் ஒரே கட்சி அ.தி.மு.க., மட்டுமே: தி.நகர் சத்யா

தி.நகர்: தி.நகர் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் சத்யா, இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். கடந்த 2021ல் நடந்த தேர்தலில் 137 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டார்.

இம்முறை வெற்றி பெறுவதற்காக, ஒவ்வொரு வார்டிலும் மக்கள் குறைகளை கேட்டு வருகிறார்; அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் அவற்றை நிறைவேற்றுவதாக வாக்குறுதியளித்து வருகிறார்.

அவர் கூறியதாவது:

எம்.ஜி.ஆர்., காலத்தில் இருந்து, மக்களுடன் நின்று அவர்களுக்காக உழைக்கும் ஒரே கட்சி அ.தி.மு.க., மட்டுமே. கடந்த முறை பொய் வாக்குறுதிகளை அளித்து, பெண்களை ஏமாற்றி, தி.மு.க., ஆட்சிக்கு வந்தது.

அதன் விளைவாக, போதை பொருள் விற்பனையில் தி.மு.க.,வினரே ஈடுபட்டதுடன், இளைஞர் சமுதாயத்தை சீர்குலைத்து வருகின்றனர்.

சிறுமியர் முதல் மூதாட்டி வரை பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தி.மு.க., அரசியல் கூட்டங்களில் பெண் போலீசாருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுகிறது.

அ.தி.மு.க., ஆட்சியில், பெண்கள் மீதான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; கஞ்சா விற்பனை முற்றிலும் ஒழிக்கப்படும்.

இவ்வாறு சத்யா கூறினார்.

Advertisement