கே.ஜி.கண்டிகையில் குற்ற செயல்களை தடுக்க புதிய காவல் நிலையம் அமையும் தே.மு.தி.க., வேட்பாளர் உறுதி

திருத்தணி: “திருத்தணி பகுதிகளில் குற்றச்செயல்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், கே.ஜி.கண்டிகையில் புதிய காவல் நிலையம் அமைக்கப்படும்,” என, தே.மு.தி.க., வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி உறுதியளித்தார்.

திருத்தணி சட்டசபை தொகுதியில் தி.மு.க., கூட்டணி சார்பில், தே.மு.தி.க., வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி போட்டியிடுகிறார்.

நேற்று காலை திருத்தணியிலும், பின், ஆர்.கே.பேட்டை ஒன்றியம் அம்மையார்குப்பம் உள்ளிட்ட 15 ஊராட்சிகளிலும், தே.மு.தி.க., வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி, திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன், தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் பூபதி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பிரசாரம் மேற்கொண்டனர்.

அப்போது, கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:

மக்கள் நடமாட்டம் அதிகளவில் உள்ள இடங்களில், 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்படும். தொகுதி மக்களின் நலன் கருதி எம்.எல்.ஏ., அலுவலகத்தில் முழுநேர பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, மக்களின் தேவைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படும்.

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, ஆர்.கே.பேட்டை - சோளிங்கர் மற்றும் ஆர்.கே.பேட்டை - பள்ளிப்பட்டு ஆகிய வழித்தடங்களில் புறவழிச்சாலைகள் அமைக்கப்படும்.

திருத்தணி பகுதியில் குற்றச்செயல்களை தடுக்கவும், பெண்கள், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கே.ஜி.கண்டிகையில் புதிய காவல் நிலையம் அமைக்கப்படும்.

திருத்தணி தொகுதியில் உள்ள அனைத்து ஏரிகள், நீர்வரத்து கால்வாய்கள், மதகுகள் மற்றும் கடைவாசல்கள் உள்ளிட்டவை பருவ மழைக்கு முன் துார்வாரப்படும்.

இளைஞர்களுக்கு உள்ளூரிலேயே வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், திருத்தணி - அரக்கோணம் நெடுஞ்சாலையில் பன்னாட்டு தொழில் நிறுவனங்களின் கிளைகள் துவக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement