பூனிமாங்காடு ஆரம்ப சுகாதார நிலைய சுற்றுச்சுவர் சேதம்

திருத்தணி: அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளதால், சமூக விரோத செயல்கள் மற்றும் கால்நடைகள் சுற்றித் திரிகின்றன.

திருவாலங்காடு ஒன்றியம் பூனிமாங்காட்டில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும், 100க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கர்ப்பிணியருக்கு பரிசோதனை மற்றும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

ஆரம்ப சுகாதார நிலைய சுற்றுச்சுவரை முறையாக பராமரிக்காததால், ஆங்காங்கே சுற்றுச்சுவர் உடைந்துள்ளன. இதனால், சுகாதார நிலையத்திற்குள் கால்நடைகள் சுற்றித் திரிகின்றன. மேலும், இரவு நேரத்தில் சமூக விரோத செயல்கள் நடந்து வருகின்றன. மேலும், போதையில் ஆசாமிகள், ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் பெண் செவிலியர்களிடம் தகராறு செய்கின்றனர்.

எனவே, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விரைந்து நடவடிக்கை எடுத்து, சுகாதார நிலையத்திற்கு சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement