தெற்காசிய டேபிள் டென்னிஸ் தங்கம் வென்றார் சென்னை வீரர்

சென்னை: தெற்காசிய இளைஞர் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், சென்னை வீரர் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

சர்வதேச டேபிள் டென்னிஸ் சங்கம் மற்றும் அகில இந்திய டேபிள் டென்னிஸ் சங்கம் சார்பில், தெற்காசிய அளவில் இளைஞர் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி, ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள சிம்லாவில் நடந்தது.

இதில், தெற்கு ஆசியாவின் ஐந்து நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் போட்டியிட்டனர்.

இதன் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியா சார்பில் சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலையின் பாலமுருகன் போட்டியிட்டார்.

காலிறுதி போட்டியில் அசத்திய இந்திய அணி, அரையிறுதி போட்டியில் இலங்கை அணியை எதிர்த்து 3 - 0 என்ற செட் கணக்கில் சுலபமாக வெற்றியை பதிவு செய்து, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

விறுவிறுப்பாக நடந்த இறுதிச்சுற்றில் இந்திய அணி, வங்கதேசத்தை எதிர்த்து 3 - 1 என்ற செட் கணக்கில் வெற்றியை பதிவு செய்து அசத்தியது.

வெற்றி பெற்ற அணியில் சிறப்பாக விளையாடிய சென்னையின் பாலமுருகனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Advertisement