'அ.தி.மு.க.,வில் அதிக பலனை அனுபவித்தவர் ஓ.பி.எஸ்.,': தினகரன்

4

அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், நம் நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:

பகையாளி பழனிசாமி திடீர் பங்காளியானதன் பின்னணி என்ன?




அ.தி.மு.க.,வை விட்டு நீக்கியதால் தான் அ.ம.மு.க., உருவானது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 2021ல் எங்களை அழைத்து கூட்டணிக்கு வர வேண்டும் என்றார். அப்போது அது நடக்காமல் போனது. அதை நான் மீண்டும் 'போஸ்ட்மார்டம்' செய்ய விரும்பவில்லை. அமித் ஷா மீது எனக்கு அபரிமிதமான மரியாதையும் நம்பிக்கையும் உண்டு. தமிழகத்தில் மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் நாங்கள் எவ்வளவு உறுதியாக உள்ளோமோ, அதைவிட அதிகமான உறுதியுடன் அமித் ஷா உள்ளார்.

தமிழகத்தில், ஒரு குடும்பத்தின் பிடியில் தவறான ஆட்சி உள்ளது. மீண்டும் நல்ல ஆட்சி அமைக்க தேசிய ஜனநாயக கூட்டணியால் தான் முடியும் என்ற அமித் ஷாவின் முயற்சியால் தான், பகையாளிகள் பங்காளி ஆகியிருக்கிறோம். நாங்கள் எல்லாரும், அம்மா வளர்த்த பிள்ளைகள் தான்; பகையாளி அல்ல. தீய சக்தி தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான் எங்கள் நோக்கம்.

உங்கள் சித்தி சசிகலாவுக்கும் உங்களுக்கும் என்னதான் பிரச்னை? அவருடன் இணைந்து செயல்பட முடியாதது ஏன்?




எனக்கும், சித்தி சசிகலாவுக்கும் தனிப்பட்ட முறையில் எந்த பிரச்னையும் இல்லை. அவர் சிறைக்கு சென்ற பின், அவர் மீதான கொலைப்பழியை துடைத்தெறிந்தது லட்சோப லட்சம் தொண்டர்கள். ஆர்.கே.நகர் தேர்தலில் சசிகலா மீதான அவதுாறு பிரசாரத்தை முறியடித்தோம். சித்தியின் மீது ஏற்பட்ட அன்பால் லட்சோப லட்சம் தொண்டர்கள் அ.ம.மு.க.,வை இயக்கி வருகின்றனர்.

அவர், பெங்களூரு சிறையில் இருந்து வந்தபோது, 24 மணி நேர வரவேற்பு தந்தனர். அ.ம.மு.க., தலைவர் பதவியை சசிகலாவிற்காக தான் வைத்திருந்தோம். அவர் அதில் ஆர்வம் காட்டவில்லை. அவர் அரசியலை விட்டு ஒதுங்குவதாக தெரிவித்தார். மீண்டும் பலமுறை எங்கள் கட்சி நிர்வாகிகள் அவரை கட்சிக்கு அழைத்த போதும் அவர் முடிவு எடுக்காமல் இருந்தார்.

சசிகலா தனி கட்சி தொடங்கி வேட்பாளர்களை நிறுத்தியிருப்பது, அ.தி.மு.க., கூட்டணியின் வெற்றி வாய்ப்பை பாதிக்குமே?




தி.மு.க.,வுக்கு எதிரான ஓட்டுகள், உறுதியாக அ.தி.மு.க., கூட்டணிக்கு தான் வரும். இதில் மாற்று கருத்து இல்லை. சசிகலா கட்சி உட்பட மற்ற புதிய கட்சிகளின் வரவு, எங்களுக்கு எந்த பாதிப்பையும் தராது.

பன்னீர்செல்வம் தி.மு.க.,வில் சேருவார் என எதிர்பார்த்தீர்களா? அவரை அ.தி.மு.க., கூட்டணிக்குள் கொண்டு வர முயன்றீர்களா?




நண்பர் பன்னீர்செல்வம், தி.மு.க.,விற்கு சென்றது உண்மையிலேயே துரதிர்ஷ்டவசமானது. மிகவும் வருந்தத்தக்கது. காரணம், 1999ல் லோக்சபா தேர்தலுக்காக தேனி மாவட்டத்திற்கு நான் சென்றபோது, அவர் நகர செயலராக இருந்தார். எனது தேர்தல் வெற்றிக்குப் பின், கட்சியிலும் பதவிகளிலும் பலருக்கும் அம்மா வாய்ப்பளித்தார்.

ஆட்சியிலும் சட்டசபை உறுப்பினர்களாகவும் எம்.பி.,க்களாகவும் அமைச்சர்களாகவும் பதவிகள் தந்தார். பன்னீர்செல்வம் எப்படி இடைக்கால முதல்வராக ஆனார் என்பதை நான் சொல்ல தேவையில்லை. அது எல்லாருக்கும் தெரியும். ஒன்றே ஒன்று; அ.தி.மு.க., வரலாற்றைப் பொறுத்தவரை உச்சபட்சமான பலனை அடைந்தவர் அன்பு நண்பர் பன்னீர்செல்வம் தான். ஜெ., இருந்தபோது பதவியை மீண்டும் திரும்ப தந்து விட்டேன் என்கிறார். அவர் திரும்பத் தராமல் இருக்க முடியுமா?

அவர் வெளியில் சென்று, தமது கையைப் பிடித்து முறித்ததாகவும், தம்மை மிரட்டியதாகவும் பொய் சொன்னார். மறுநாளே ஜெ., நினைவிடத்தில் தர்மயுத்தம் நடத்தினார். ஜெ., மரணத்தில் சந்தேகம் உள்ளது. சசிகலா குடும்ப பிடியிலிருந்து கட்சியை மீட்டெடுக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லி போராடினார். இன்னும் சொல்லப் போனால் அதற்கு முன்பே இரட்டை இலையை முடக்க காரணமாகவும் இருந்தார்.

கட்சியிலேயே இல்லாத ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை வைத்துக்கொண்டு, 11 எம்.எல்.ஏ.,க்களுடன் சேர்ந்து தி.மு.க.,வுக்கு ஆதரவாக செயல்பட்டார். மோடியின் பெருந்தன்மையால் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டு துணை முதல்வர், வீட்டு வசதித் துறை அமைச்சர் போன்ற பதவிகள் வழங்கப்பட்டன. அ.தி.மு.க., ஆட்சி போன பின், மீண்டும் வெளியேறினார்.

இடையில், தன்னை தொண்டனாகவாவது அ.தி.மு.க.,வில் சேர்த்துக் கொள்ளுங்கள் என அவர் கூறியதெல்லாம், தி.மு.க.,வில் அவர் சேர்வதற்கு முன்பாக நியாயப்படுத்துவதற்காக செய்ததாகும்.

தான் இல்லை என்றால் அந்த கட்சி அழிய வேண்டும் என்பதற்காக, அவர் தி.மு.க.,வில் இணைந்தார்.

பன்னீர்செல்வம் பக்கம் துளி கூட நியாயம் இல்லை. தேனி மாவட்ட மக்கள் அவருடைய சுயநலமான நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பணநாயகத்தை நம்பி தான் நிற்கிறார். அவரது அமைப்பை எனது கட்சியில் இணைப்பதாக கடந்த செப்டம்பர் மாதமே கூறினார். அதன்பின் அவர் வரவில்லை; நானும் கேட்கவில்லை. அவர் எடுத்த முடிவு விபரீத முடிவு. இப்படி ஒரு கொடூரமான மனம் உடையவராக இருப்பார் என நான் கனவிலும் நினைக்கவில்லை. இருப்பினும் எனக்கு வருத்தமில்லை.

சசிகலா, பன்னீர்செல்வம், செங்கோட்டையனுடன் நீங்களும் இணைந்திருந்தால், வலிமையான சக்தியாக மாறியிருப்பீர்கள். அதற்கான முயற்சியில் ஈடுபட்டீர்களா?




செங்கோட்டையன் எனக்கு 40 ஆண்டு கால நண்பர். அவர் அ.தி.மு.க.,விலிருந்து வெளியேறியவுடன் என்னை தொடர்பு கொண்டார். பசும்பொன்னுக்கு அவர் வந்திருந்த போது அவரிடம் பேசினேன். அவர் த.வெ.க.,வில் இணைவதாக முடிவு எடுத்துவிட்டு பின்னர் பேசிய போது, நான் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.

அமித் ஷாவை சந்தித்த பின், செங்கோட்டையன் த.வெ.க.,வில் இணைந்தார். பன்னீர்செல்வம் தி.மு.க.,வில் இணைந்தார். நீங்கள் அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்தீர்கள். உங்களுக்கு அமித் ஷா ஏதாவது வாக்குறுதி அளித்தாரா?




செங்கோட்டையனை சந்தித்தது குறித்து அமித் ஷா என்னிடம் எதுவும் கூறவில்லை. செங்கோட்டையன் இவ்வாறு அரசியல் நிலைப்பாடு எடுத்தவுடன், அவரை மீண்டும் கூப்பிடுங்கள் என்று தான் அமித் ஷா என்னிடம் கூறினார்.

அமித் ஷாவை அண்ணன் பன்னீர்செல்வம் சந்தித்த பின் தி.மு.க.,வுடன் இணைவோமா, த.வெ.க., உடன் இணைவோமா என அவர் கருத்து கேட்டது குறித்து அமித் ஷா என்னிடம் வருத்தப்பட்டார்.

மற்றபடி அமித் ஷாவை நான் சந்திக்க, சகோதரர் அண்ணாமலை தான் ஏற்பாடு செய்தார். இந்தக் கூட்டணி அமைய வேண்டுமென பழனிசாமி மனப்பூர்வமாக விரும்புவதாக, மத்திய நிதியமைச்சரும் எங்களை நம்பிக்கைக்குரியவர்களாக பார்த்தார். மற்றபடி எனக்கு வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அமித் ஷாவும் எங்களுக்கு வேறு எந்த வாக்குறுதியும் தரவில்லை.

பல தேர்தல்களை சந்தித்துள்ளீர்கள். விஜய் எத்தனை சதவீத ஓட்டுகளைப் பெறுவார் என நினைக்கிறீர்கள்?




விஜயகாந்த் முதல்முறையாக தேர்தலில் போட்டியிட்ட போது, அப்போது ஆளுங்கட்சியாக இருந்த அ.தி.மு.க.,வை தான் அதிகம் பாதித்தது. இந்த முறை விஜய் தலைமையில் கூட்டணி எதுவும் அமையவில்லை. விஜயகாந்த் ஒரு தேர்ந்த அரசியல்வாதியாக செயல்பட்டார். விஜய் இப்போதுதான் அரசியலுக்குள் வருகிறார். தேர்தலை இப்போதுதான் சந்திக்கின்றனர். விஜய், தி.மு.க., வின் ஓட்டு வங்கியைத்தான் சிதைப்பார் என தோன்றுகிறது. விஜய், 10 முதல் 12 சதவீதம் ஓட்டு பிரிக்க வாய்ப்புள்ளது.

ஸ்டாலின், உதயநிதி, பழனிசாமி பிரசாரத்தில், பரஸ்பரம் தனிப்பட்ட தாக்குதல்கள் அதிகம் இருக்கின்றன. இதனால் யாருக்காவது பலன் கிடைக்குமா?




டில்லியின் அடிமைகள் என ஸ்டாலின் பேசுவதற்கு அ.தி.மு.க., பதில் சொல்லித்தானே ஆக வேண்டும்? இவர்களும் பா.ஜ.,வின் கூட்டணியில் இருந்தபோது டில்லியில் அடிமையாக இருந்தனரா என்ற கேள்வி எழுகிறதே? எங்களுக்கும் அ.தி.மு.க.,விற்கும் கருத்து வேறுபாடு இருந்தபோது அதை இன்னொருவர் தானே பேசி தீர்க்க வேண்டி இருந்தது? பா.ஜ., மற்ற கட்சிகளை கபளீகரம் செய்யும் என்ற கூற்று உண்மையல்ல. அப்படி செய்வதென்றால் எங்கள் இரு கட்சிகளின் இணைப்பிற்கு அவர்கள் முயற்சி செய்திருக்க மாட்டார்களே? டில்லி எங்களுக்குள் சுமுகமான சீட்டு பகிர்வு ஏற்பட உதவி செய்தது. 'துாக்கு மாட்டிக் கொள்வோம்' என நான் கோபத்தில் கூறியதை சுட்டிக்காட்டி உதயநிதி பேசுகிறார். அதற்கு நாங்கள் பதில் அளித்து தானே ஆக வேண்டும்?

ஸ்டாலினும் உதயநிதியும் அப்படித்தான் பேசுகின்றனர். முன்பு, கருணாநிதியும் இப்படித்தான் பேசியுள்ளார். கருணாநிதி, காமராஜரையும் இந்திராவையும் எம்.ஜி.ஆரையும் அனந்தநாயகி அம்மையாரையும் இதே போல தான் பேசி இருக்கிறார். இதற்கு பதில் அளிக்காமல் அமைதியாக இருந்தால் ஒப்புக்கொண்டது போல் ஆகிவிடும்.

தமிழகத்தை மத்திய பா.ஜ., அரசு வஞ்சிப்பதாக, ஸ்டாலின் பிரசாரம் செய்வது, மக்களிடம் எடுபடத்தானே செய்யும்?




பா.ஜ., என்றாலே தமிழகத்துக்கு விரோதமான கட்சி; இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எதிரான கட்சி என்று பொய் பிரசாரம் மேற்கொள்கிறார்கள். தமிழகத்தை வஞ்சிப்பது எனக் கூறுவதெல்லாம் இந்த தேர்தலில் உறுதியாக எடுபடாது.

ஏனெனில், லோக்சபாவில் சட்டம் தாக்கல் செய்வதற்கு முன்பாகவே இது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா தெளிவுபடுத்தி விட்டார். சில மாநிலங்களில் பொய் பிரசாரம் நடக்கிறது என்பதையும் தெரிவித்துவிட்டார். அதற்கு விளக்கமாக பதில் தருவார். சட்டசபையிலோ லோக்சபாவிலோ பேசுவது அரசின் கொள்கைதான். எனவே, அமித் ஷா தெரிவித்தபடி 59 தொகுதிகளாக உயரும்.

பெரும்பாலான கருத்து கணிப்புகள், தி.மு.க., தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்கின்றன. உங்கள் கணிப்பு என்ன?




பல்வேறு புதிய கருத்துக்கணிப்புகள் அ.தி.மு.க.,வுக்கு சாதகமாக உள்ளன. முன்பை விட தற்போது தி.மு.க., சீட்டுகள் குறைந்துவிட்டன. தி.மு.க.,வின் அராஜகப் போக்குக்கு மக்கள் அமைதியாக இருந்து பதில் அளிப்பர். அ.தி.மு.க., அறுதிப் பெரும்பான்மை பெற்று தனித்து ஆட்சி அமைக்கும்.

தேர்தலுக்கு பின் அ.தி.மு.க.,வும், அ.ம.மு.க.,வும் இணைய வாய்ப்புள்ளதா?




ஜெ., திருவுருவம் தாங்கிய கொடியுடன் கட்சி நடத்துகிறேன். அந்த கட்சியை சுருட்டி வைக்க முடியாது. கூட்டணியில் தொடர்வோம்.

பல ஆண்டுகளுக்கு பின், தொகுதி பங்கீட்டு பேச்சுக்காக அ.தி.மு.க., தலைமை அலுவலகம் சென்றீர்கள். அப்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?




ஜெ., அலுவலகத்திற்கு சென்ற போது, அம்மா அங்கு இருப்பதாக உணர்ந்தேன். 1986 - -87ல் இருந்தே அந்த அலுவலகத்திற்கு சென்று இருக்கிறேன். இடையில் பலமுறை பல்வேறு சந்தர்ப்பங்களில் சென்றுள்ளேன். அந்த அலுவலகம் சென்றது மகிழ்ச்சியாக இருந்தது.

நயினார் நாகேந்திரனும், நீங்களும் பரஸ்பரம் விமர்சித்து கொண்டீர்கள். இப்போது அவருடனான உறவு எப்படி இருக்கிறது?




நயினார் நாகேந்திரனுடன் எந்த விமர்சனமும் உரசலும் இல்லை. அவர் பல ஆண்டுகால நண்பர். பன்னீர்செல்வம் விஷயத்தில் அவர் என்னிடம் கேட்டிருந்தால் டில்லியில் பேசுவதற்கு ஏற்பாடு செய்திருப்பேன் எனக் கூறி பேசியதை பெரிதுபடுத்தி விட்டனர். நயினார் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, சாத்துாரில் இரண்டு கூட்டங்களில் பேசுகிறேன். எங்களுக்குள் எந்த பகையும் இல்லை.

சசிகலா சிறைக்கு சென்றபோது, அ.தி.மு.க.,வை உங்களிடம் ஒப்படைத்தார். அதை கோட்டை விட்டு விட்டோமே என்ற வருத்தம் உள்ளதா?




அப்படி எல்லாம் இல்லை. 2011ல் அம்மா என்னை கட்சியை விட்டு நீக்கியிருந்தார். நான், ஒன்பதரை ஆண்டுகளாக கட்சியிலேயே இல்லை. 2017ல் சித்தி சிறைக்குப் போகும் போது தான் நான் அவரது வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் கட்சிக்குள் வந்தேன். அ.தி.மு.க., ஒரு பொதுச்சொத்து. கோட்டைக்கு போக வேண்டும் என்ற எண்ணமெல்லாம் எனக்கு கிடையாது. நான் எப்போதும் சுதந்திரமானவன். சுதந்திரமாக இருப்பது எனக்கு வசதியாக உள்ளது. மனதில் பட்டதை சொல்ல முடியும்.

இன்னொரு கட்சியில் நான் இணைந்து இருந்தால், அந்த கட்சி நிலைப்பாட்டுக்கு ஏற்ப நான் பேசி இருக்க வேண்டும். நிறைய விஷயங்கள் பேச முடியாமல் போகும். இப்போது அ.தி.மு.க.,வில் என் நிலைப்பாடு தான் என் கட்சியின் நிலைப்பாடு. சுதந்திரமாக இருக்கிறேன்.

உங்கள் தலைமையின் கீழ் இருந்தவர்கள், இன்று அமைச்சர்களாக, தேசிய கட்சி மாநிலத் தலைவராக இருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?




மகிழ்ச்சியாக பார்க்கிறேன். ஜெ., பேரவை மாநிலச் செயலராக நான் இருந்தபோது, நயினார் நாகேந்திரன் மாவட்ட செயலராக இருந்தார். கட்சியின் பொறுப்புகளில் இருந்து வளர்ந்து தற்போது ஒரு கட்சியின் மாநில தலைவராக இருக்கிறார். அவர் பா.ஜ.,விற்கு செல்லும் போது கூட என்னிடம் சொல்லிவிட்டு தான் சென்றார். தற்போது அவர் தொகுதியில் இரண்டு இடங்களில் பேசுகிறேன்.

பிரதமர் மோடி, அமித் ஷா சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக திகழ்கின்றனர் என்கிறீர்கள். ஆனால், தமிழகத்தில் தி.மு.க., 10 தொகுதிகளில் இஸ்லாமியர்களுக்கு சீட் தந்துள்ளது. அ.தி.மு.க.,வோ ஒரே ஒரு தொகுதி மட்டும் தந்துள்ளது ஏற்புடையதா?




சீட் ஒதுக்கீடு தரும்போது வாய்ப்பு இல்லாமல் போய் இருக்கலாம். நானும் கூட எனக்கு கிடைக்கும் தொகுதிகளில் கம்பம் தொகுதி கிடைத்தால் இஸ்லாமியருக்கு தருவதாக இருந்தேன். ஆனால், அந்த தொகுதி கிடைக்கவில்லை.

வெளியுறவு துறையின் செயல்பாட்டால் தான், பெட்ரோல், டீசல் எரிவாயு பிரச்னையில் மற்ற நாடுகளை விட பாதிப்பில் இருந்து நாம் தப்பித்துள்ளோம். தீவிரமான இஸ்லாமிய நாடான ஈரான், இந்திய கப்பல்களுக்கு உதவி புரிகிறது. இதற்கு மோடியின் வெளியுறவு துறை செயல்பாடுகள் தான் காரணம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement