ஓட்டுப்போட படகில் ஆபத்து பயணம் :தாங்கல்பெரும்புலம் கிராமத்தில் அவலம்

பொன்னேரி: பழவேற்காடு அடுத்த தாங்கல் பெரும்புலம், இடையன்குளம் ஆகிய கிராமங்களில், 450 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கான ஓட்டுப்பதிவு மையம், பழவேற்காடு - காட்டுப்பள்ளி சாலையில் உள்ள கோரைகுப்பம் மீனவ கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்தது.

மேற்கண்ட கிராமங்களுக்கும், கோரைகுப்பம் கிராமத்திற்கு இடையே பழவேற்காடு ஏரி அமைந்துள்ளது. நேற்று இவர்கள் ஓட்டு போடுவதற்காக, எந்தவொரு பாதுகாப்பு கவசமும் இல்லாமல் ஆபத்தான முறையில் படகுகளில் கோரைகுப்பம் வந்து, ஓட்டு போட்டுவிட்டு சென்றனர்.

இதுகுறித்து, கிராம மக்கள் கூறியதாவது:

எங்கள் கிராமங்களில் இருந்து கோரைகுப்பம் மீனவ கிராமத்திற்கு சாலை வழியாக செல்ல வேண்டுமானால், 15 கி.மீ., சுற்றிவர வேண்டும். எந்தவொரு போக்குவரத்து வசதியும் இல்லை. ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என்பதற்காக, படகில் வந்து ஓட்டு போடுகிறோம்.

வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஓட்டுப்போடுவதை தவிர்க்கின்றனர். ஒவ்வொரு தேர்தலின்போதும் இதே நிலை தான் உள்ளது. இனி வரும் காலங்களிலாவது, எங்கள் பகுதிக்கு தனி ஓட்டுப்பதிவு மையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement