ராகுல் - ஸ்டாலின் கூட்டு பிரசாரம் இல்லை: தி.மு.க., கைவிட்டு விடுமோ என காங்., அச்சம்

11

- நமது நிருபர் -

முதல்வர் ஸ்டாலினும், லோக்சபா எதிர்கட்சித் தலைவர் ராகுலும் ஒரே மேடையில் பிரசாரம் செய்யப் போவதில்லை என்பது நேற்று உறுதியாகி உள்ளது. இதனால், தங்கள் தொகுதிகளில் தி.மு.க., காலை வாரி விட்டு விடுமோ என்ற அச்சம், காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

தேர்தல் பிரசாரத்திற்காக, இன்று தமிழகம் வரும் ராகுல், சென்னையை அடுத்த பொன்னேரி, சோளிங்கர், துறையூர் ஆகிய 3 தொகுதிகளில், காங்., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். முதல்வர் ஸ்டாலினுடன் இணைந்து, ஒரே மேடையில், ராகுல் பிரசாரம் செய்வதற்கு வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

இது குறித்து, தமிழக காங்., நிர்வாகி ஒருவர் கூறியதாவது: ஓசூரில் நாளை நடக்கும் பிரசாரக் கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலினுடன் இணைந்து, காங்., தலைவர் கார்கே பிரசாரம் செய்கிறார். ராகுலும், ஸ்டாலினும் ஒரே மேடையில் பேசும் திட்டம் இல்லை. ஆட்சியில் பங்கு இல்லை என, ஸ்டாலின் தெரிவித்ததால், அவருடன் இணைந்து பிரசாரம் செய்ய, ராகுல் விரும்பவில்லை. ராகுலின் இந்த முடிவு, தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கு வருத்தத்தை அளித்துள்ளது.

தி.மு.க.,வினரை நம்பியே, காங்., வேட்பாளர்கள் உள்ளனர். காங்., தொகுதிகளுக்கான தேர்தல் செலவை, தி.மு.க., தான் ஏற்றுள்ளது. ஆனால், ராகுல் மீதான அதிருப்தியால், பாரபட்சம் காட்டப்பட்டால், காங்கிரசார் கரையேறுவது கடினம். முதல்வர் ஸ்டாலினுடன் பிரசாரம் இல்லை என்றதும், ராகுல் கூட்டத்திற்கு தி.மு.க.,வினர் செல்ல வேண்டாம் என, கூறப்பட்டுள்ளது. அதேபோல, ஓட்டு போட வேண்டாம் என்றும் கூறி விட்டால் என்னாவது?இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில், காங்., சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினரும், முன்னாள் பொதுச்செயலருமான தாம்பரம் நாராயணன் வெளியிட்ட ஆடியோ பதிவில், காங்., போட்டியிடும், மூன்று தொகுதிகளில் மட்டும் ராகுல் பிரசாரம் செய்தால், அந்த மூன்று தொகுதிகளில் தோல்வி அடைய வேண்டும் என்ற நிலைப்பாட்டை தி.மு.க.,வினர் எடுப்பரா, எடுக்க மாட்டர்களா? த.வெ.க.,வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்திருக்க வேண்டும். இப்போது போல, ரெண்டு கெட்டான் அரசியலை காங்கிரஸ் செய்யக் கூடாது,' என கூறியுள்ளார்.

@block_B@ 'கூட்டு பிரசாரம் இல்லை!'

தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி நேற்று கூறுகையில், “ராகுல் இன்று பிரசாரத்திற்கு தமிழகம் வருகிறார். ராகுல் ஒரு பக்கம் பிரசாரம் செய்கிறார். முதல்வர் ஸ்டாலின் ஒரு பக்கம் பிரசாரம் செய்கிறார். இருவரும் ஒன்றாக பிரசாரம் செய்ய நேரம் இல்லை. ஏற்கனவே அவர்களின் பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளதால், அதற்கான நேரம் இல்லை. அவர்களுக்கு நாங்கள் ஓட்டு கேட்கிறோம். எங்களுக்கு அவர்கள் ஓட்டு கேட்கின்றனர். எல்லாம் ஒன்று தான்.” என்றார்.block_B

Advertisement