புதுச்சேரியில் விஜய்க்கு யார் ஓட்டு போட்டனர்?

11

- நமது நிருபர் -

இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் தமிழக அரசியல் களத்தில், மணிக்கு ஒருமுறை சர்வேக்கள் வந்து குவிகின்றன. அந்தந்த சர்வேயை 'ஸ்பான்ஸர்' செய்யும் கட்சிக்கு பலம் என்பது போலவே முடிவுகளும் எட்டப்படுகின்றன.

சில சர்வேக்களில் தி.மு.க.,விற்கு 150 தொகுதிகள், சிலவற்றில்அ.தி.மு.க.,விற்கு 150 தொகுதிகள். ஒரே ஒரு விஷயத்தில் தான் அனைத்து சர்வேக்களும் ஒன்றுபடுகின்றன. அது, விஜய் கட்சிக்கு 18- - 21 சதவீதம் ஓட்டுகள் கிடைக்கும் என்பது தான். இந்த 18 - -21 சதவீதம் எங்கிருந்து வரும்? யாருடைய ஓட்டுகள் பிரியும்? இந்த கேள்விகளுக்கு யாரிடமும் தெளிவான பதில் இல்லை.

அ.தி.மு.க.,வின் ஓட்டு தான் பிரியும் என, தி.மு.க.,வினர் பல காரணங்களை முன்வைத்து அடித்துச் சொல்கின்றனர். அதே போல், தி.மு.க., ஓட்டு தான் பிரியும் என, அ.தி.மு.க.,வினர் அடித்துச் சொல்கின்றனர். புதுச்சேரியில் கடந்த 9ம் தேதி முடிந்த ஓட்டுப்பதிவை தொடர்ந்து வரும் தகவல்கள், இந்த குழப்பத்தை ஓரளவிற்கு தீர்க்கும் விதத்தில் விடையளிக்கின்றன. அங்கு, 91.23 சதவீதம் ஓட்டு பதிவாகி உள்ளதால், அங்கிருந்து வரும் தகவலுக்கு நம்பகத்தன்மையும் அதிகமாக உள்ளது.

புதுச்சேரியில், ஜாதி - மத பிரிவினரில், வன்னியர் -35 சதவீதம், பட்டியல் இனத்தவர் 15 சதவீதம், கிறிஸ்தவர் - முஸ்லிம்கள் இணைந்து 12 சதவீதம், மீனவர்கள் 5.50 சதவீதம் இருக்கின்றனர். இது, கிட்டத்தட்ட தமிழகத்தின் விழுப்புரம், கடலுார் மாவட்டங்களை போல் தான்.

புதுச்சேரியில், தங்கள் வெற்றி - தோல்வியை கணித்து வரும் வேட்பாளர்கள், விஜய் கட்சிக்கு எவ்வளவு ஓட்டு போனது என்பதை வைத்து தான் தங்கள் நிலையை உறுதி செய்து வருகின்றனர்.

அவர்களின் ஆய்வுகளில் கிடைத்த தகவல்கள் வருமாறு:

மீனவர்கள்




புதுச்சேரியில், 5.50 சதவீதம் உள்ள மீனவர்களின் ஓட்டு, பேரலை போல் த.வெ.க.,விற்கு சென்றுள்ளது. இது பற்றி, புதுச்சேரியில் செயல்படும் தேசிய மீனவர் பேரவையின் மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

புதுச்சேரியில் நடந்த தேர்தலில், எப்போதும் இல்லாத அளவுக்கு இம்முறை 1,000 கோடி ரூபாய் இறங்கியது. ஒரு குடும்பத்துக்கு 40,000 ரூபாய் வரை கொடுத்தனர். ஆனாலும், விஜயை மீனவராகவே எங்கள் மக்கள் நினைத்தனர். அதனால் தான், பணத்தை தாண்டி, விஜய்க்கு கணிசமான ஓட்டுகள் விழுந்திருக்கிறது. அதே போல் தமிழகத்திலும் நிச்சயம் நடக்கும்.

இங்கு, மீன்பிடி தடைக்காலத்தில், அரசு தரும் நிவாரணத்தில் கூட, அதிகாரிகள் கமிஷன் வாங்கிக் கொள்கின்றனர். ஆட்சியாளர்கள் எங்களை ஓட்டு வங்கியாகக் கூட கருதவில்லை. எனவே தான், மீனவ குடும்பங்கள் மொத்தமாக, விஜய்க்கு ஓட்டு போட முடிவு செய்துவிட்டனர். இதை, மீனவ சங்கங்களால் கூட தடுக்க முடியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதே போல் தான் தமிழகத்திலும், 14 மாவட்டங்களில் 50 -- 70 லட்சம் வரை உள்ள மீனவர் ஓட்டுகளின் கணிசமான பகுதி, த.வெ.க.,விற்கு போகும் என, இந்திய தேசிய மீனவர் சங்கத்தின் தலைவர் கீச்சாங்குப்பம் ராஜேந்திரன் தெரிவிக்கிறார்.

அவர் கூறியதாவது: இலங்கை கடற்படையால், தமிழக மீனவர்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு, நிரந்தர தீர்வை பெற்று தருவோம் என, இதுநாள் வரையில் பிரதமர் மோடி உறுதியளிக்கவில்லை. அதை செய்ய முடியாது என தெரிந்தும், மீனவர்களை ஏமாற்ற, முன்னாள் முதல்வர் பழனிசாமியும், தற்போதைய முதல்வர் ஸ்டாலினும் கடிதம் எழுதுகின்றனர். அந்த கடிதங்கள் எல்லாம் குப்பைக்கு போனதுதான் மிச்சம்.

தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், கலெக்டர் அலுவலகத்தில் நடந்து வந்த மீனவர் குறைதீர்வு கூட்டம் நடக்கவில்லை. சுனாமி போன்ற பேரலைகளில் இருந்து, மீனவ குடியிருப்புகளை பாதுகாக்க, 2005 மற்றும் 2006ம் ஆண்டுகளில், அலை தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டன. ஆனால், அவை அனைத்தும், 2018ம் ஆண்டு வந்த கஜா உள்ளிட்ட அடுத்தடுத்த புயல்களால் சிதலமடைந்துவிட்டன.

மீண்டும் அதை கட்ட வேண்டும் என, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., அரசிடம் வலியுறுத்தி எதுவுமே நடக்கவில்லை. டீசல் மானியத்தை உயர்த்தகூறி கேட்டால், பிச்சை போடுவதுபோல், தி.மு.க., அரசு நடந்து கொள்கிறது. இத்தனை ஆண்டுகளாக நம்மை இவர்கள் ஏமாற்றிவிட்டனர் என கோபமாக உள்ளனர். இந்த காரணங்களால் தான், புதுச்சேரியில் மீனவர்கள் ஓட்டு, த.வெ.க.,வுக்கு மாறிவிட்டது. தமிழகத்திலும், ஏன் விஜய்க்கு ஓட்டு போடக்கூடாது என்ற மனநிலைக்கு, மீனவர்கள் வந்துவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

மீனவர்கள் மத்தியில் தி.மு.க.,வுக்கு எதிரான மனநிலை தீவிரமாகி வருகிறது. ஆனால், அந்த ஓட்டுக்கள் அ.தி.மு.க.,விற்கு கிடைக்காது என, தெரிகிறது. கடந்த முறை நா.த.க.,வுக்கு இந்த சமூகத்தில் இருந்து கணிசமாக கிடைத்த ஓட்டுக்களும் இந்த முறை த.வெ.க.,விற்கே கிடைக்கும் என, தெரிகிறது. சென்னை, கடலுார், நாகப்பட்டினம், ராமநாதபுரம், துாத்துக்குடி, கன்னியாக்குமரி வரை, 35 தொகுதிகளில் மீனவர்கள் அடர்த்தியாக உள்ளனர்.

பட்டியலினத்தவர்




புதுச்சேரியில், பெருவாரியான பட்டியலினத்தவர் த.வெ.க.,விற்கு ஓட்டுப்போட்டுள்ளனர். அனேக பட்டியலினத்தவர் குடியிருப்பு பகுதியில் த.வெ.க., கொடி தான் பறக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது, விஜய் ரசிகர் மன்றங்கள் அந்த பகுதியில் அதிகளவில் அமைக்கப்பட்டுள்ளது தான். புதுச்சேரியிலும் தமிழகம் போலவே பட்டியலின மக்கள், தாங்கள் பெரிய கட்சிகளால் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறனர். அதனாலேயே, இளைஞர்கள் வற்புறுத்தலால், வீட்டில் உள்ள பெரியவர்களும் த.வெ.க.,விற்கு வாக்களித்து உள்ளனர்.

தமிழகத்திலும், புதுச்சேரி போலவே தான், பட்டியலின குடியிருப்பு பகுதிகளில், விஜய் ரசிகர் மன்றங்கள், மற்ற பகுதிகளைவிட அதிகளவில் உள்ளன.

தமிழகத்தில் 20 சதவீதம் வரை உள்ள பட்டியலின ஓட்டுக்கள் புதுச்சேரி போலவே, இளைஞர் பெரியவர் என, பேதம் இல்லாமல், பெருவாரியாக த.வெ.க.,விற்கு செல்லும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றி, தாழ்த்தப்பட்டோர் இன செயற்பாட்டாளர் நல்லசாமி கூறியதாவது:

திராவிட இயக்கங்கள், எங்கள் இன மக்கள் வாழும் பகுதிகளில் தேவையான அடிப்படை வசதிகளை கூட செய்து கொடுக்கவில்லை. தமிழகத்தின் பல கிராமங்களில் உள்ள தாழ்த்தப்பட்டோருக்கான குடிநீர், கழிப்பறை, மயான பாதை, சாலை வசதி உள்ளிட்டவைகளை செய்து கொடுக்க வேண்டும் என்ற சிந்தனை கூட அவர்களிடம் இல்லை. இதையெல்லாம் செய்து கொடுங்கள் என திராவிட அரசுகளிடம் கேட்டுக் கேட்டு, பட்டியிலின மக்களுக்கு அலுத்துவிட்டது. அதனால், எங்கள் மக்கள் மனங்களில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

இரு திராவிட இயக்கங்களும் தமிழகத்தை ஆண்டது போதும் என்ற முடிவுக்கு வந்து விட்டனர். குறிப்பாக, படித்த இளைஞர்கள், பெண்கள் மத்தியில் இந்த எண்ணம் வீரியமாக இருக்க, தமிழகத்தின் புதிய அரசியல் வரவான விஜயை நோக்கிச் செல்ல அவர்கள் முடிவெடுத்து விட்டனர். தங்கள் ஆதரவை அவருக்கு காட்ட வேண்டும் என்பதற்காகவே, விஜய் செல்லும் இடங்களுக்கெல்லாம் எங்கள் இனத்தை சேர்ந்தோர் சாரை சாரையாக செல்கின்றனர்.

234 தொகுதியிலும் விஜயே போட்டியிடுவதாக நினைத்து ஓட்டளிக்க உள்ளனர். இதைத்தான், புதுச்சேரியில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களும் உணர்ந்து, பெருவாரியாக அங்கு விஜய்க்கு ஓட்டளித்து உள்ளனர். அதனால், புதுச்சேரியிலும் தமிழகத்திலும், இம்முறை தேர்தல் முடிவுகள் வித்தியாசமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

சிறுபான்மையினர்




புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் உள்ளனர்.

கிறிஸ்தவ அடையாளத்தோடு, விஜய் அரசியலுக்கு வந்துள்ளதால், 'நம் மதத்தை சேர்ந்தவர்' என விஜய் மீது கிறிஸ்தவர்களுக்கு பற்று ஏற்பட்டது. சமீபகாலமாக பா.ஜ., எதிர்ப்பு என்பதை தாண்டி, கிறிஸ்தவர்கள் ஓட்டை பெற, காங்கிரஸ்- தி.மு.க.,வுக்கு வேறு காரணங்கள் இல்லை. அதனால் தான், பா.ஜ., எதிர்ப்பில் தீவிரமாக இல்லை என்றாலும், விஜயை கிறிஸ்வதவர்கள் நம்புகின்றனர்.

சர்ச்களில், ஞாயிறு 'பிரேயர்'க்கு பின், இளைஞர்கள், தங்கள் சமூக பெரியோர்களிடம் விஜய்க்கு வாக்களிக்க வேண்டும் என்று பிரசாரம் செய்து வந்தனர். விளைவாக, புதுச்சேரியில் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்கள், பெருவாரியாக த.வெ.க.,விற்கே சென்றுள்ளன.

இதே போல் தான் தமிழகத்திலும், பல இடங்களில், சர்ச்சில் உள்ள பாஸ்டர் உள்ளிட்டோர், தி.மு.க.,விற்கு வாக்களிக்க வேண்டும் என்று அறிவுறுத்தும்போது, எதிர்ப்பு கிளம்புவதாக செய்திகள் பதிவாகிவிட்டன. இது பற்றி, கன்னியாகுமரி மாவட்டம், அருமனை கிறிஸ்தவ அமைப்பின் தலைவர் ஸ்டீபன் கூறியதாவது:

காலம்காலமாக, கிறிஸ்துவர்களை ஓட்டு வங்கிக்காக மட்டுமே தி.மு.க., பயன்படுத்துகிறது. கிறிஸ்தவர்களுக்கு இடையே, ஜாதி மோதலை வளர்க்கும் சக்தியாகவே தி.மு.க., செயல்படுகிறது. கிறிஸ்துவ மக்களின் நன்மைக்காக இதுவரை எதையும் செய்யவில்லை. முஸ்லிம் மக்கள் புனித யாத்திரை செல்ல, ஹஜ் பயணத்துக்கு நிதி ஒதுக்குகிறது தி.மு.க., அரசு. கிறிஸ்தவர்கள் ஜெருசலம் செல்ல, அ.தி.மு.க., நிதி ஒதுக்கியது அதையும் நிறுத்திவிட்டது தி.மு.க.,

எனவே, கிறிஸ்தவர்கள் யாரும் தி.மு.க.,வுக்கு ஓட்டுபோட இம்முறை தயாராக இல்லை. ஆனால், கிறிஸ்தவ அமைப்பின் தலைவர்களுக்கு, வாரியங்களிலும், சிறுபான்மை ஆணையத்திலும் பதவி தருகிறேன் என பேராயர்களை கைக்குள் போட்டுக் கொண்டு, கிறிஸ்வதர்கள் எல்லாம் தி.மு.க., பக்கம்தான் இருக்கின்றனர் என்ற மாயையை உருவாக்குகின்றனர். அந்த மாயை இந்த தேர்தலில் உடையும். கிறிஸ்தவரான விஜயை, இந்த மக்கள் நம்புகின்றனர். எங்களின் கஷ்டத்தை அவர் புரிந்து கொள்வார். எனவேதான், வாக்காளர்களில் 18 சதவிதம் உள்ள கிறிஸ்தவர்களில், 70 சதவிதம் பேர் த.வெ.க.,வுக்கு ஓட்டளிப்பர். இவ்வாறு அவர் கூறினார்.

முஸ்லிம்கள் மத்தியில், குறிப்பாக, இளம் வயதினர் மற்றும் பெண்கள் மத்தியில் த.வெ.க.. பக்கம் சாய்வு உள்ளது. புதுச்சேரியில் இவர்கள் அனேகமாக த.வெ.க.,விற்கு தான் ஓட்டளித்து உள்ளனர். இது பற்றி, எழுத்தாளர் புதுமடம் ஜாபர் அலி கூறியதாவது:

புதுச்சேரியில் எனக்கு நண்பர்கள் நிறைய உண்டு. அவர்கள், அங்கு நடைபெற்ற சட்டசபைத் தேர்தல்கள் குறித்து என்னிடம் நிறைய பேசினர். அங்கு, என்.ஆர்.காங்.,- பா.ஜ., ஆட்சிக்கு நிறைய எதிர்ப்பு மக்கள் மத்தியில் இருந்தது. இதனால், தி.மு.க., - காங்., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், அங்கு நிலவிய பல்வேறு குழப்பமான சூழல்களால், அக்கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பில்லை என்றும், த.வெ.க.,வுக்கு இம்முறை கூடுதல் ஓட்டுகள் செல்ல வாய்ப்புள்ளது என்றும் தேர்தலுக்கு முன் கூறினர். தற்போது, அங்கிருக்கும் முஸ்லிம் மக்களில் பெரும்பாலானோர், விஜய்க்கு ஓட்டளித்திருப்பதாக தகவல் வந்திருக்கிறது.

அதே போன்றதொரு நிலைதான் தமிழக தேர்தலிலும் எதிரொலிக்கும். முஸ்லிம் இயக்கங்கள் தொடர்ந்து தி.மு.க.,வைத்தான் தமிழகத்தில் ஆதரித்து வருகின்றன. ஆனால், முஸ்லிம் மக்கள் அப்படி இல்லை. முஸ்லிம் இயக்கங்கள் சொல்லும் வார்த்தைகளை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொண்டு ஓட்டளிக்கத் தயாரில்லை. சிறுபான்மை இனத்தோருக்கு நாங்கள் தான் பாதுகாப்பு அரண் என்று சொல்லி, ஒவ்வொரு முறையும் ஓட்டு வாங்கிக் கொண்டு, அவ்வின மக்களை ஏமாற்றி வந்த தி.மு.க.,வை இனி நம்ப வேண்டாம் என, முஸ்லிம் மக்கள் முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது.

அதன் வெளிப்பாடாக, விஜய்க்கு இம்முறை முஸ்லிம் மக்களில் பெரும்பான்மையானோர் ஓட்டளிக்கக் கூடும். தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக இருக்கும் முஸ்லிம்கள், விஜய்க்கு பெருவாரியாக ஓட்டளிக்கும் பட்சத்தில், தமிழகத்தில் யாரும் எதிர்பார்க்காத அதிர்ச்சி பலருக்கும் காத்திருக்கிறது. உறுதியாக சொல்லவதென்றால், புதுச்சேரி பாணி தமிழக தேர்தலிலும் எதிரொலிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இளம் வாக்காளர்கள்




புதுச்சேரியில், 26 சதவீத வாக்காளர்கள், 18 முதல் 30 வயதிற்கு உட்பட்ட இளம் வாக்காளர்கள். கடந்த தேர்தலில் 20 சதவீதமாக இருந்த இவர்கள் பங்கு இப்போது 26 சதவீதமாக உயர்ந்துள்ளது. இவர்களில் ஏறத்தாழ 60 சதவீதம் பேர் த.வெ.க.,விற்கு ஓட்டுப் போட்டதாக தெரிகிறது. இது, ஜாதி, மத பேதமின்றி நடந்துள்ளது. இவர்களில், முதல் முறை வாக்காளர்கள் அனேகமாக த.வெ.க.,விற்கு மட்டுமே ஓட்டுப்போட்டு உள்ளனர். அதே போல், 77 - 80 சதவீதம் பட்டியிலின இளைஞர்களின் ஓட்டு த.வெ.க.,விற்கு கிடைத்து உள்ளது.

தமிழகத்தில், 21.30 சதவீதம் பேர் இளம் வாக்காளர்கள். மொத்தம், 1.20 கோடி ஓட்டுக்கள் அவர்கள் கையில் உள்ளது. புதுச்சேரி பாணியிலேயே இங்கும் ஓட்டுப்போட்டால், 72 லட்சம் ஓட்டுகள் வரை த.வெ.க.,விற்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இப்படி, புதுச்சேரி போல் ஓட்டுகள் மாறும் பட்சத்தில், தி.மு.க., விற்கு தனது பாரம்பரிய வாக்கு வங்கியில் சிதைவு ஏற்படும், அ.தி.மு.க.,விற்கு தனது பெண்கள் ஓட்டு பாதிக்கப்படும் என, தெரிகிறது.

Advertisement