இருசக்கர வாகன அணிவகுப்பில் ஓட்டு சேகரித்தார் சிற்றரசு

சென்னை: அண்ணா நகரில் மாபெரும் இருசக்கர வாகன அணிவகுப்பை நடத்தி, தி.மு.க., வேட்பாளர் சிற்றரசு பிரசாரம் செய்தார்.

அண்ணா நகர் தி.மு.க., வேட்பாளராக, மாவட்ட செயலர் சிற்றரசு போட்டியிடுகிறார்.

தேர்தல் பிரசாரத்திற்கு இறுதி நாளான நேற்று, கட்சி நிர்வாகிகளுடன், அண்ணா நகர் தொகுதி முழுதும் மாபெரும் இருசக்கர வாகன அணிவகுப்பில், வீதி வீதியாக சென்று, மக்களிடம் ஓட்டு சேகரிப்பில் சிற்றரசு ஈடுபட்டார்.

கீழ்ப்பாக்கம் கல்லரை சாலை, தர்மராஜா கோவில், பூந்தமல்லி நெடுஞ்சாலை பல்வேறு பகுதிகள் என, பல்வேறு இடங்களுக்கு சென்று, பிரசாரத்தை நிறைவு செய்தார்.

அலைமோதிய பிரசார கூட்டத்தின் நடுவே, மக்களை சந்தித்து ஆதரவு கோரினார். வழிநெடுக, குழந்தைகள் முதல் முதியோர் வரை, பட்டாசு வெடித்து, அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

சிற்றரசு பேசியதாவது:

அண்ணா நகரில், பட்டா, ஆவண உதவி, அமைந்தகரை முதல் அண்ணா நகர் இடையே புதிய பாலம் அமைக்கப்படும். இளைஞர்களுக்கான முதல்வர் படைப்பகம், நவீன வாகன நிறுத்தம், கிரீன் அண்ணா நகர் நடைபாதைகள், விளையாட்டு திடல்கள், தெரு விளக்குகள் ஏற்படுத்தப்படும்.

அதேபோல், மக்கள் குறைகளை தெரிவிக்க வசதியாக 24 மணி நேரமும் செயல்படும் 'வாட்ஸாப்' சிறப்பு எண் அறிவிக்கப்படும். மக்கள், எளிதாக அணுகும் எம்.எல்.ஏ.,வாக சிறப்பாக செயல்படுவேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement