அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா

திருப்போரூர்: ஆலத்தூர், வெங்கலேரி கிராமங்களில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் மூன்று அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன.

இங்கு பயிலும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுடன், அவர்களின் அறிவாற்றலை சோதிக்கும் வகையில், கதை, பாட்டு, விளையாட்டு வாயிலாக கல்வி கற்றுத் தரப்படுகிறது.

இதில், பயின்ற 5 வயது நிறைவடைந்து முதலாம் வகுப்பு செல்ல உள்ள குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி முடித்தமைக்கான சான்றிதழ் வழங்கும் விழா ஆலத்தூரில் நேற்று நடந்தது.

விழாவில், முன்பருவ கல்வி முடித்த 30 குழந்தைகளுக்கு சான்றிதழ், பதக்கம், ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில், திருப்போரூர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் பூர்ணிமா தலைமை வகித்தார். முதல்நிலை மேற்பார்வையாளர் ராஜேஸ்வரி, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர் பங்கேற்றனர்.

Advertisement