ஊழலற்ற ஆட்சியை விஜய் தருவார்:P த.வெ.க., வேட்பாளர் பிரபாகர் பேச்சு

சென்னை: ''ஊழலற்ற ஆட்சியை த.வெ.க., தலைவர் விஜய் கொடுப்பார்,'' என, இறுதிக்கட்ட பிரசாரத்தில், த.வெ.க., வேட்பாளர் பிரபாகர் பேசினார்.

ஆயிரம்விளக்கு தொகுதியில், இறுதிக்கட்ட பிரசாரத்தில், த.வெ.க., வேட்பாளர் பிரபாகர் நேற்று ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

தனக்கு கிடைக்கும் வருவாயை விட்டுவிட்டு, தன்னை உருவாக்கி அழகுபார்த்த தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழக வெற்றிக் கழகத்தை விஜய் தொடங்கினார்.

அவரை பொறுத்தவரை, மக்கள் விரும்பும் ஆட்சியை தர வேண்டும் என நினைக்கிறார். அதனாலே, லஞ்சம் லாவண்யம், ஊழலற்ற அரசை உருவாக்க வேண்டும் என்ற முனைப்போடு இருக்கிறார்.

த.வெ.க.,வின் தேர்தல் அறிக்கை, அனைத்து தரப்பு மக்களிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தேர்தல், ஜனநாயகத்திற்கும் பண நாயகத்திற்குமான போட்டியாக உள்ளது.

ஒரு கட்சி, 1,000 ரூபாய் கொடுக்கிறது. மற்றொரு கட்சி 1,500 ரூபாய் தருகிறது. தேர்தல் கமிஷனின் சட்ட விதிமுறைகளை காலில் போட்டு மிதிக்கும் அளவில் வாக்காளர்களுக்கு, பணம் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது.

இம்முறை தமிழக மக்கள், விழிப்போடு இருக்கின்றனர். ஒருவர் தரும் பணம் எப்படி வந்தது, அவரின் பின்புலம் என்ன ஆகியவற்றை சிந்தித்து பார்க்கின்றனர்.

ஓட்டுக்காக தரும் பணத்தை, மக்கள் வாங்கி வைத்துக்கொண்டு, முதல்வராக யார் வர வேண்டும் என நினைக்கின்றனரோ, அவருக்கு தான் ஓட்டளிப்பர். தமிழகத்தில் ஊழல் அற்ற ஆட்சியை த.வெ.க., தலைவர் விஜய் வழங்குவார். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement