தவறான சிகிச்சையால் இளம்பெண் இறப்பு? மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை!
சென்னை: தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாக, உறவினர்கள் குற்றம்சாட்டி, அரசு ராஜிவ்காந்தி மருத்துவமனையை முற்றுகையிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம், சித்தாலப்பாக்கம், வாஞ்சிநாதன் தெருவைச் சேர்ந்தவர் விவேக் சுதன், 32; கண்ணாடி வேலைபாடு தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பிரியதர்ஷினி, 27. தம்பதிக்கு நான்கரை வயதில் மகளும், இரண்டு வயதில் மகனும் உள்ளனர்.
கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக, கடந்த 9ம் தேதி, எழும்பூரில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் பிரியதர்ஷினி சேர்க்கப்பட்டார். அங்கு, அவருக்கு, 10ம் தேதி அறுவை சிகிச்சை நடந்தது.
அப்போது, பிரியதர்ஷினி சுயநினைவு இழந்ததால், அங்கேயே தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். பின், எம்.ஆர்.ஐ., ஸ்கேன், டயாலிசிஸ் எடுக்க வேண்டும் எனக்கூறி, ஆம்புலன்ஸ் வாகனம் மூலம், சென்ட்ரலில் உள்ள ராஜிவ்காந்தி மருத்துவமனைக்கு, 12ம் தேதி அழைத்துச் சென்றனர்.
அங்கு ஸ்கேன், டயாலிசிஸ் எடுக்கப்பட்டது. அதே மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். தொடர் சிகிச்சையில் இருந்த அவர், நேற்று காலை 10:30 மணிக்கு உயிரிழந்தார்.
பிரியதர்ஷினி இறந்த தகவலறிந்த அவரது உறவினர்கள் 30க்கும் மேற்பட்டோர், ராஜிவ்காந்தி மருத்துவமனையை முற்றுகையிட்டனர். 'எழும்பூர் மருத்துவமனையில், அனஸ்தீசியா அதிகம் கொடுத்ததாலே பிரியதர்ஷினி உயிரிழந்தார்' என, வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து, அவரது உடலை வாங்க மறுத்து, போராட்டம் நடத்தினர்.
தகவலறிந்து வந்த பூக்கடை உதவி கமிஷனர் வீரக்குமார் தலைமையிலான போலீசார், அவர்களிடம் சமரசப்பேச்சு நடத்தினர். இதுகுறித்து எழும்பூர் போலீசில் புகார் அளிக்கும்படி கூறியதை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.