சைபர் கிரைம் மோசடியில் மேலும் ஒருவர் சிக்கினார்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் சைபர் கிரைம் மோசடியில் ஏஜென்ட்களாக செயல்பட்ட 3 பேரை போலீசார் கைது செய்த நிலையில் மேலும் ஒருவரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். தப்பியோடிய அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரத்தில் சைபர் குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பெற்ற பணத்தை கிரிப்டோகரன்சியாக மாற்றி வெளி நாடுகளுக்கு அனுப்பும் ஏஜென்ட்களாக செயல்பட்ட 3 பேரை சைபர் கிரைம் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சத்து 7 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் மேலும் சிலர் இதில் ஏஜென்ட்களாக செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. அதன்படி முதுகுளத்துார் பர்மா காலனி பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் விக்னேஷ்வர் 23, வீட்டில் நேற்று சோதனை நடத்தினர். இதில் அவர் மேற்கொண்ட பணப்பரிவர்த்தனை விவரங்களை போலீசார் கைப்பற்றினர்.

மேலும், வீட்டில் இருந்து 33 அலைபேசிகள், 19 ஏ.டி.எம்., கார்டுகள், 49 வங்கி கணக்கு புத்தகங்கள், 29 சிம் கார்டுகள், ஒரு மடிக்கணினியை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய விக்னேஷ்வரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் மோசடி பணத்தை பெறுவதற்காக வங்கி கணக்கு விபரங்களை கமிஷனுக்கு வாங்கி கொடுக்கும் ஏஜென்டுகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

---

Advertisement