பின்னலாடை வாரியம், வர்த்தக மையம்: தி.மு.க. வேட்பாளர் தினேஷ்குமார் உறுதி  

திருப்பூர்:திருப்பூர் பகுதியில் கொடிசியா போன்ற வர்த்தக மையம் அமைக்கவும், காதர்பேட்டை போன்ற பனியன் சந்தை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என, தெற்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் தினேஷ்குமார் பிரசாரம் செய்தார்.

திருப்பூர் தெற்கு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில், தி.மு.க. சார்பில் தினேஷ்குமார் இத்தேர்தலில் போட்டியிடுகிறார். இதையடுத்து அவர் தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சியின் 21 வார்டு பகுதிகளிலும், வாக்காளர்களை நேரில் சென்று சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அனைத்து வார்டுகளிலும் தினமும் பகுதி வாரியாக பிரசார வாகனத்தில் சென்றும், முக்கிய இடங்களில் வீதிகளில் நடந்து சென்றும் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.மேலும் பகுதிவாரியாக பள்ளிவாசல் நிர்வாகிகளைச் சந்தித்தும், இஸ்லாமிய பிரமுகர்கள் மற்றும் வாக்காளர்களையும் சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார். அவ்வகையில் காதர்பேட்டை பள்ளிவாசலில் பள்ளி வாசல் நிர்வாகிகளைச் சந்தித்து பேசினார். அதன் பின் அங்கு தொழுகை முடிந்து வந்த இஸ்லாமியர்களைச் சந்தித்து ஓட்டு சேகரித்தார். அதையடுத்து காதர்பேட்டையில் உள்ள செகண்ட்ஸ் பனியன் விற்பனை செய்யும் வியாபாரிகள் மற்றும் கடைகளுக்கு வந்த வாடிக்கையாளர்களையும் அவர் சந்தித்து பேசி ஆதரவு திரட்டினார்.

வேட்பாளருடன் தெற்கு நகர செயலாளர் நாகராஜ். கவுன்சிலர் திவாகரன், ஐ.யு.எம்.எல்.- ம.ம.க.- எஸ்.டி.பி.ஐ.- முஸ்லிம் லீக் அமைப்பு நிர்வாகிகள் உடன் சென்று ஓட்டு சேகரித்தனர்.

தனது பிரசாரத்தில் வேட்பாளர் தினேஷ்குமார் பேசியதாவது:

திருப்பூரின் முதன்மையான தொழிலாக பனியன் உற்பத்தி மற்றும் வர்த்தகம் உள்ளது. இப்பகுதியில் கோவையில் உள்ள கொடிசியா போன்ற வர்த்தக மையம் அமைக்கப்படும். இதன் மூலம் பனியன் ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், இதில் தொடர்புடைய வர்த்தகர்கள் பயன் பெறுவர். காதர்பேட்டை பகுதி மிகவும் முக்கியமான வர்த்தக மையமாக திருப்பூரில் அமைந்துள்ளது. இதே போல் மேலும் ஒரு பனியன் சந்தை அனைத்து வசதிகளுடன் கட்டமைக்கப்படும். பனியன் தொழில் நகரமாக உள்ள திருப்பூர் தொழில் துறையினர் நுால் உற்பத்தி முதல் ஆயத்த ஆடை ஏற்றுமதி வரை பல்வேறு தரப்பிலும் இயங்கி வருகிறது.இந்த நிறுவனங்களில் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையிலும், ஏற்றுமதியை அதிகரிக்கும் விதமாகவும், திருப்பூர் பின்னலாடை வாரியம் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

---

காதர்பேட்டை பள்ளிவாசலில் தொழுகை முடிந்துவந்த இஸ்லாமியர்களிடம் தி.மு.க. வேட்பாளர் தினேஷ்குமார் ஓட்டு சேகரித்தார்.

Advertisement