தி.மு.க., வேட்பாளரின் குடும்பம் 'கார்ப்பரேட் கம்பெனி' :அ.தி.மு.க., வேட்பாளர் சுதாகர் குற்றச்சாட்டு

ஊத்துக்கோட்டை:''தி.மு.க., வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் குடும்பம் ஒரு கார்ப்ரேட் கம்பெனி. அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே சம்பாதித்து உள்ளனர்,'' என கும்மிடிப்பூண்டி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் சுதாகர் குற்றம் சாட்டினார்.

கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் வி.சுதாகர், பூண்டி கிழக்கு ஒன்றியம், ஒதப்பை, நம்பாக்கம், அரியத்துார், டி.பி.புரம், கூனிப்பாளையம், பென்னலுார்பேட்டை, சீத்தஞ்சேரி உள்ளிட்ட 18 ஊராட்சிகளில், நேற்று ஓட்டு சேகரித்தார்.

அப்போது அ.தி.மு.க., வேட்பாளர் சுதாகர் பேசியதாவது:

கும்மிடிப்பூண்டி தொகுதியில் கடந்த முறை வெற்றி பெற்ற தி.மு.க., வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன், நலத்திட்டங்கள் எதுவும் செய்யவில்லை. அவரது குடும்பம் ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அவர், அவரது மகன், மகள், மாப்பிள்ளை, பெண் கொடுத்தோர், பெண் எடுத்தோர் என அவர்கள் மட்டுமே தொகுதியில் அனைத்து பணிகளையும் செய்து, சம்பாதித்தனர்.

கட்சியில் உள்ளவர்கள் யாரையும் சம்பாதிக்க விடவில்லை.

தமிழகம் முழுதும் கஞ்சா, போதைப் பொருட்கள் புழக்கத்தால், சிறுமிகள், மாணவிகள், பெண்கள், வயதான பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. காவல் துறையினரின் கைகள் கட்டப்பட்டு உள்ளன. எனவே, அராஜக ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பூண்டி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் பிரசாத், மாவட்ட பொருளாளர் வெங்கட்ரமணா, பா.ஜ., தகவல் தொழில் நுட்ப மாநில தலைவர் மகேஷ்குமார், மாவட்ட தலைவர் சுந்தரம், துணை தலைவர் சீனிவாசன், பூண்டி ஒன்றிய தலைவர் உதயகுமார் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

Advertisement