பெண்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அநீதி முதல்வர் ரேகா குப்தா ஆவேச பேச்சு

புதுடில்லி: “லோக்சபா மற்றும் சட்டசபைக்கு பெண்களை வரவிடக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் முடிவு செய்து விட்டன,”என, முதல்வர் ரேகா குப்தா பேசினார்.

அனைத்து இந்திய வர்த்தக கூட்டமைப்பு சார்பில், பெண் தொழில் முனைவோர் மாநாடு டில்லியில் நேற்று நடந்தது. மாநாட்டை துவக்கி வைத்து, டில்லி முதல்வர் ரேகா குப்தா பேசியதாவது:

லோக்சபா மற்றும் சட்டசபையில் பெண்களை வரவிடக்கூடாது என்று எதிர்க்கட்சிகள் முடிவு செய்து விட்டன. அதற்காக, எந்த விலை கொடுக்கவும் எதிர்க்கட்சியினர் தயாராக இருக்கின்றனர்.

அக்கறை எதிர்க்கட்சியினர் தங்கள் குடும்பங்களில் உள்ள பெண்களைப் பற்றி மட்டுமே கவலைப்படுகின்றனர். நாட்டிலுள்ள, 70 கோடி பெண்களைப் பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை.

இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்கவே விரும்பு கின்றன.

நம் நாட்டில், 1971-ம் ஆண்டு மக்கள் தொகை, 50 கோடியாக இருந்தது. அதுவே இப்போது, 140 கோடியாக அதிகரித்துள்ளது. அந்த வகையில் பார்த்தால், லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டும்.

ஆனால், எதிர்க்கட்சிகளுக்கு அதில் சிக்கல் இருக்கிறது. தற்போதைய தொகுதியை இரண்டாகப் பிரித்து, அதில் ஒரு தொகுதி பெண்ணுக்கு ஒதுக்கப்படுவதை எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை.

மேற்கத்திய நாடுகளுடன் நம் நாட்டை ஒப்பிடும்போது, அங்குள்ள சில நாடுகளில் பெண்களுக்கு 50 சதவீதம் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாடுகளில், 50 சதவீதத்துக்கும் அதிகமாகவே ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதை நம் நாட்டின் எதிர்க்கட்சிகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஒரு மாநில முதல்வராக பெண் பதவி வகிப்பது வெறும் அரசியல் சார்ந்தது மட்டுமல்ல. கண்ணியம் மற்றும் உணர்வுபூர்வமான அக்கறை சார்ந்தது. முடிவெடுக்கும் செயல்முறையில் ஒரு பங்கை பெண்களுக்கு வழங்குவதற்கான ஒரு முக்கியமான வாய்ப்பு எதிர்க்கட்சிகளால் பறிக்கப்பட்டு விட்டது.

பெண்களுக்கு அதிகாரம் அளிக்க காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தடையாக இருப்பது இது முதன் முறையல்ல.

எதிர்கட்சிகளின் இந்த அணுகுமுறை அவர்களின் உண்மையான நோக்கத்தை நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டது.

உரிமைகள் நாட்டில் நடக்கும் அத்தனை விவகாரங்களையும் பெண்கள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். பெண்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இழைத்த அநீதிக்கு நிச்சயம் பதில் கிடைக்கும்.

பெண்கள் இனி தங்கள் உரிமைகளைத் தாங்களே முன்னின்று வென்றெடுப்பர். நாடு முழுதும் ஒவ்வொரு தொகுதியிலும் பெண்கள், இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சியினரிடம் கேள்வி எழுப்புவர்.

இவ்வாறு அவர் பேசினார்.

லோக்சபா மற்றும் சட்டசபையில் பெண்களுக்கு, 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் 'மகிளா சக்தி சட்ட திருத்த மசோதா' லோக்சபாவில் நேற்று முன் தினம் நடந்த ஓட்டெடுப்பில் தோல்வி அடைந்தது. மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓட்டுப் போட்டதைக் கண்டித்து, முதல்வர் ரேகா குப்தா கையில் கருப்புப் பட்டை அணிந்திருந்தார்.

@block_B@

மெட்ரோ ரயில் நிலையத்தில் ஆய்வு

டில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நான்காம் கட்ட திட்டப் பணிகள் மும்முரமாக நடக்கின்றன. ஆர்.கே.ஆசிரமம் மார்க் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடக்கும் கட்டுமானப் பணிகளை, முதல்வர் ரேகா குப்தா நேற்று ஆய்வு செய்தார். டில்லி மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள், கட்டுமானப் பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, முதல்வருக்கு விளக்கினர். அப்போது, அதிகாரிகளிடம் ரேகா குப்தா பேசியதாவது: நாட்டின் தலைநகரான டில்லியின் உயிர்நாடியாக மெட்ரோ ரயில் திகழ்கிறது. தினமும் லட்சக்கணக்கான பயணியர் மெட்ரோ ரயில்களில் பயணிக்கின்றனர். எனவே, உயர்தரத்தில் கட்டுமான பணிகளை செய்ய வேண்டும். பாதுகாப்பில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். மேலும், குறித்த காலத்துக்குள் பணிகளை முடித்து ரயில் சேவையை துவக்க வேண்டும். வளர்ந்து வரும் டில்லி மாநகரின் தேவைக்கு ஏற்ப, போக்கு வரத்து மற்றும் இணைப்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது மிகவும் அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.block_B

Advertisement