ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் இறந்த 21 பேரின் குடும்பத்திற்கு அரசு வேலை

சாம்ராஜ்நகர்: ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் இறந்த 21 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு, அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் நேற்று வழங்கினர்.

சாம்ராஜ்நகர் அரசு மருத்துவமனையில் கடந்த 2020ம் ஆண்டு ஏற்பட்ட, ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் கொரோனா நோயாளிகள் 36 பேர் இறந்தனர். இவர்களில் 21 நோயாளிகள் குடும்பத்தினர், தங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று, கடந்த ஆறு ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் சாம்ராஜ்நகரின் குண்டுலுபேட்டில் நேற்று நடந்த அரசு நிகழ்ச்சியில், உயிரிழந்த 21 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு, அரசு பணிக்கான நியமன ஆணையை முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் மஹாதேவப்பா, வெங்கடேஷ் வழங்கினர். அவர்கள் கல்வி அடிப்படையில் சாம்ராஜ்நகர் அரசு மருத்துவமனையில் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் சித்தராமையா பேசுகையில், ''பா.ஜ., ஆட்சியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால், கொரோனா நோயாளிகள் 36 பேர் இறந்த சம்பவம் ஆறாத வடுவாக உள்ளது. அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற வாக்குறுதியை, நாங்கள் நிறைவேற்றி உள்ளோம்,'' என்றார்.

முன்னதாக குண்டுலுபேட் ஹெலிபேடில் அவர் அளித்த பேட்டி:

சாம்ராஜ்நகருக்கு சென்றால் முதல்வர் பதவி பறிபோகும் என்று மூடநம்பிக்கை உள்ளது. இதனை நான் நம்புவது இல்லை. வாக்குறுதி திட்டங்களை எதிர்த்தவர்கள் தற்போது ஆதரவாக உள்ளனர்.

பெண்கள் இடஒதுக்கீடு என்ற பெயரில், தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்ய பார்க்கின்றனர். இதை நாங்கள் எதிர்க்கிறோம். மூன்றாவது மொழி மதிப்பெண் விவகாரத்தில், நீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement