திருச்சியில் இன்று விஜய் 'ரோடு ஷோ' கடலுாரில் 3வது முறையாக ரத்து

திருச்சி: த.வெ.க., தலைவர் விஜய், இன்று திருச்சி கிழக்கு தொகுதியில் பிரசாரம் செய்ய, 27 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.

சட்டசபை தேர்தலில், சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் விஜய், இன்று திருச்சி கிழக்கு தொகுதியில் பிரசாரம் செய்ய உள்ளார்.

அதற்காக, மதியம் 2 மணிக்கு விமானத்தில் திருச்சி வரும் விஜய், அத்தொகுதிக்கு உட்பட்ட வயர்லெஸ் சாலை, கே.கே.நகர் பஸ் ஸ்டாண்ட், கொட்டப்பட்டு ஆகிய இடங்களில் திறந்தவெளி வாகனத்தில் 'ரோடு ஷோ' சென்று, ஓட்டு சேகரிக்கிறார்.

திருச்சி கிழக்கு தொகுதியில், பிற்பகல் 3:00 முதல் இரவு 8:00 மணி வரை, விஜய் பிரசாரம் செய்ய, திருச்சி மாநகர போலீசார், 27 நிபந்தனைகளுடன் அனுமதி கொடுத்துள்ளனர்.

இதற்கிடையே, கடலுாரில், த.வெ.க., தலைவர் விஜயின், இன்றைய பிரசாரம் ரத்தாகி உள்ளது. ஏற்கனவே, கடலுாரில், கடந்த ஏப்.,9ம் தேதி போலீசார் அனுமதி வழங்கினர்.

புதுச்சேரி தேர்தல் காரணமாக, பிரசாரம் ரத்து செய்யப்பட்டு, 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஏப்., 11ல், விஜய்க்கு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக பிரசாரம் ரத்தானது.

இதனால், இன்று திருச்சி பிரசாரத்துடன் கடலுாரிலும் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டு, ஹெலிகாப்டரில் வர, விஜய் முடிவு செய்திருந்தார். கடலுார் மைதானத்தில் ஹெலிபேடில் இறங்கி, சில்வர் பீச் வரை வாகனத்தில், 'ரோடு ஷோ' நடத்த த.வெ.க.,வினர் அனுமதி கோரினர்.

ஆனால், ரோடு ஷோ நடத்த போலீஸ் அனுமதி மறுத்து விட்டதால், கடலுாரில் இன்றைய பிரசாரம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

வரும் 21ம் தேதியுடன் பிரசாரம் நிறைவடைவதால், கடலுாரில் விஜய் பிரசாரம் மேற்கொள்வது கேள்விக்குறியாகி உள்ளது.

Advertisement