மாணவர்கள், மகளிருக்காக ஏராளமான திட்டங்கள்: தி.மு.க. வேட்பாளர் தினேஷ்குமார் பெருமிதம்
திருப்பூர்:திருப்பூர் தெற்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் தினேஷ்குமார், மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு வார்டுகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, குற்றச் சம்பவங்களைத் தடுக்கத் தொழிலாளர்களுக்கு கியூஆர் கோடு வசதியுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
திருப்பூர் தெற்கு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் தினேஷ்குமார், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினருடன் இணைந்து வீதி வீதியாகச் சென்று ஆதரவு திரட்டி வருகிறார். நேற்று மாநகராட்சியின் 44, 45 மற்றும் 50 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட தில்லை நகர், கரட்டாங்காடு, குன்னங்கல்காடு, காங்கயம் கிராஸ் வீதி, டிமாண்ட் வீதி, மிஷன் வீதி, நொய்யல் வீதி உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட பகுதிகளில் அவர் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டார்.
செல்லும் இடமெல்லாம் பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்தும், தொண்டர்கள் மலர் துாவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்தப் பிரசாரத்தின் போது அவர் பேசியதாவது:
இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு 13 ஆயிரம் கிராமங்களில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது. இதன் மூலம் மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு இளைஞர்களின் ஆர்வம் ஊக்குவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாணவர்கள் மற்றும் பெண்களுக்காகவும் பல்வேறு புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
திருப்பூரில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நகரில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில், அனைத்துத் தொழிலாளர்களுக்கும் கியூ.ஆர். கோடு வசதியுடன் கூடிய பிரத்யேக அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், வெளியூர்களில் இருந்து வந்து தங்கிப் பணியாற்றும் தொழிலாளர்களுக்கெனத் தங்கும் விடுதிகள் கட்டித் தரப்படும்.
திருப்பூர் சாய ஆலைகளுக்கு வழங்கப்பட்ட 200 கோடி ரூபாய் வட்டியில்லா கடனை, மானியமாகப் பெற்றுத் தர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருப்பூர் மாவட்டத்தின் வளர்ச்சி மற்றும் மக்கள் நலனுக்காக தி.மு.க. அரசு தொடர்ந்து பாடுபடும்.
இவ்வாறு தினேஷ்குமார் பேசினார். பகுதிச் செயலாளர் உசேன், வார்டு செயலாளர்கள் முகமது ரபீக், கமாலுதீன், அசேன், சதாம், சல்மான், ராஜகோபால், நாகார்ஜூன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
---
திருப்பூர் தெற்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் தினேஷ்குமாரை, ஆரத்தி எடுத்து வரவேற்ற பெண்கள்.
மேலும்
-
நல்லாட்சி அமைய அ.தி.மு.க., வுக்கு வாக்களியுங்கள்; வேட்பாளர் குமரகுரு பேச்சு
-
அனுமதியின்றி சைக்கிள் பேரணி: த.வெ.க., வேட்பாளர் மீது வழக்கு
-
சேவை செய்ய வாய்ப்பு தாருங்கள் : பா.ம.க., வேட்பாளர் செழியன் வேண்டுகோள்
-
பணத்தை வீசி சென்ற கட்சியினர் கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை
-
தி.மு.க, ஆட்சியில் விவசாயிகள் தொடர் பாதிப்பு: ஸ்ரீதர் வாண்டையார் குற்றச்சாட்டு
-
தி.மு.க., வேட்பாளர் கணேசன் ஓட்டு சேகரிப்பு