தி.மு.க., கூட்டணிக்கு சசிகலா கட்சி வேட்பாளர் பிரசாரம்!
இஞ்சி டீயை பருகியபடியே, ''எதிர்க்கட்சிகளின் புகார்களுக்கு ஆளாகாம, தேர்தல் பணிகளை கவனிக்கிறாருங்க...'' என, பேச்சை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
''யாரை சொல்றீர் ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் தான், மாவட்ட தேர்தல் அதிகாரியாகவும் இருக்காரு... 'சென்னையில பல அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவானவங்க'ன்னு, தேர்தல் கமிஷனிடம் புகார் கொடுத்த எதிர்க்கட்சியினர், இவர் மீதும் புகார் குடுத்திருக்காங்க...
''இதனால, நடுநிலையா செயல்பட முடிவெடுத்த குமரகுருபரன், தேர்தல் பணிகளை கவனிக்க, மாநகராட்சி பணிகள் பிரிவு துணை கமிஷனரான சிவகிருஷ்ணமூர்த்தி என்ற அதிகாரியை நியமிச்சிருக்காருங்க...
''அவர், இளமையான, துடிப்பான அதிகாரியா இருக்கிறதால, ராத்திரி, பகல் பாராம, பம்பரமா சுத்தி, தேர்தல் பணிகளை செய்றாரு... இத்தனைக்கும், சமீபத்தில் இவரது மனைவிக்கு குழந்தை பிறந்துச்சுங்க...
''அதுக்கு கூட விடுமுறை எடுக்காதவர், மாநகராட்சி வார்டுகள்ல எந்த சர்ச்சைகளும் வராத அளவுக்கு தேர்தல் முன்னேற்பாடுகளை செஞ்சிருக்காரு... இதனால, இவர் மேல யாராலும் குறை சொல்ல முடியலைங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''ஜாதி ஓட்டுகள் யாருக்குன்னு உறுதி பண்ணிட்டாவ வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''காஞ்சிபுரம் சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளரா, முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் போட்டியிடுதாரு... இங்க அதிகமா வசிக்கிற முதலியார் சமூகத்தைச் சேர்ந்த இவர், காஞ்சிபுரம் மாவட்டச் செயலராகவும் இருக்காரு வே...
''இவரை எதிர்த்து, தி.மு.க.,வில் நித்யா, த.வெ.க.,வில் ரஞ்சித்குமார், நாம் தமிழர் கட்சியில் வெற்றிச்செல்வி ஆகியோர் போட்டியிடுதாவ... இதுல, ரஞ்சித்குமாரும், நித்யாவும் நாயக்கர் சமூகம்... வெற்றிச்செல்வி மட்டுமே முதலியார்...
''தொகுதியில, பிள்ளையார்பாளையம் பகுதியில் அதிகம் வசிக்கும் முதலியார் சமூகத்தினர் ஓட்டுகள் தான், வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் சக்தியா இருக்கு... அந்த பகுதியைச் சேர்ந்த முதலியார் சங்க நிர்வாகிகள், 'சோமசுந்தரத்துக்கு ஓட்டு போடணும்'னு தீர்மானமே நிறைவேற்றி இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''சசிகலா கட்சி வேட்பாளர், தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டு கேக்கறார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''எங்கப்பா இந்த காமெடி...'' என கேட்டார், அன்வர்பாய்.
''அ.தி.மு.க., ஆட்சியில் அரசு கொறடாவாகவும், டில்லி சிறப்பு பிரதிநிதியாகவும் இருந்தவர், திருத்தணி நரசிம்மன்... கடந்த, 2021 சட்டசபை தேர்தலில், இவருக்கு, 'சீட்' தராத அதிருப்தியில், தி.மு.க.,வுக்கு ஆதரவா செயல்பட்டதால, பழனிசாமியால கட்சியில இருந்து நீக்கப்பட்டார் ஓய்...
''இதனால, சசிகலா அணிக்கு போனவரை, நடக்க போற தேர்தல்ல, திருத்தணி தொகுதி வேட்பாளரா சசிகலா அறிவிச்சாங்க... ஆனா, அவர் வேட்பு மனுவே தாக்கல் பண்ணாம, கமுக்கமா இருந்துட்டாரு வே...
''தி.மு.க.,வில் சேர அவர் எடுத்த முயற்சிகளும் பலிக்கல... இருந்தாலும், மனம் தளராம, திருத்தணி தொகுதியில், தி.மு.க., கூட்டணி சார்பில் போட்டியிடும், தே.மு.தி.க., வேட்பாளர் கிருஷ்ணமூர்த்திக்கு ஆதரவா, நரசிம்மன் தீவிரமா பிரசாரம் பண்ணிட்டு இருக்கார் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
''சசிகலா கட்சி ஆட்சியை பிடிச்சிட்டா, நரசிம்மன் பாடு திண்டாட்டமாயிடாதா வே...'' என, சிரிக்காமல் கேட்டபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.
கோவையா, கவுண்டர்கள், காஞ்சியா முதலியார்கள், தென் மாவட்டங்களில் கிறித்தவர்கள், என்று ஜாதி மதம் பார்த்து சீட் கொடுத்து வெற்றியை எதிர்பார்க்கும் இவர்கள்தான் சமூக நீதி காவலர்கள்மேலும்
-
கோவிந்தசாமி சிலைக்கு எம்.எல்.ஏ., மாலை அணிவிப்பு
-
பெண்ணிடம் செயின் பறிப்பு போலீஸ் தீவிர விசாரணை
-
சால்வை வேண்டாம், எலுமிச்சம் பழம் போதும் நிர்வாகிகளுக்கு வசந்தம் ‘அட்வைஸ்’
-
போத்துவாய் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
-
ஆத்தங்கரைப்பட்டி ஊராட்சியில் உப்பு நீரால் கல் அடைப்பு பாதிப்பு கண்டு கொள்ளாத அதிகாரிகளால் பொதுமக்கள் அவதி
-
சூரியன் ஒருபோதும் மறையாது... மறுபடியும் உதிக்கும்; சொல்கிறார் உதயநிதி