ஆத்தங்கரைப்பட்டி ஊராட்சியில் உப்பு நீரால் கல் அடைப்பு பாதிப்பு: கண்டு கொள்ளாத அதிகாரிகளால் பொதுமக்கள் அவதி
கடமலைக்குண்டு:ஆண்டிபட்டி தாலுகா ஆத்தங்கரைப்பட்டி ஊராட்சியில் அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதாரம், தெரு விளக்கு, வடிகால் வசதி ஆகியவை இன்றி பொதுமக்கள் அவதியடைகின்றனர். மேலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் இன்றி ஊராட்சி சார்பில் உப்பு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. மற்றும் உவர்ப்பு தன்மை அதிகமுள்ள நிலத்தடி நீர் பயன்பாடு காரணமாக ராஜேந்திரா நகரில் பலரும் கல்அடைப்பு பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர்.
கடமலைக்குண்டு - மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குல் ஆத்தங்கரை ஊராட்சி உள்ளது.
இந்த ஊராட்சியில் ராஜேந்திரா நகர், அண்ணா நகர், டாணா தோட்டம் ஆகிய பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் இணைப்புகள் வழங்கியும் குடிநீர் வழங்குவதில்லை. போர்வெல் மூலம் கிடைக்கும் நிலத்தடி நீரை அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்துகின்றனர். இப்பகுதி நிலத்தடி நீரில் உப்புசத்து அதிகம் இருப்பதால் பொதுமக்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படுகிறது. எரியாத தெருவிளக்குகள், சீரமைக்கப்படாத தெருக்கள், உடைந்த கழிவுநீர் வடிகால் ஆகியவை இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகின்றன.
வாரம் ஒரு முறை கூட குடிநீர் வினியோகம் இல்லை.
செந்தில்குமார், ராஜேந்திராநகர்:
ஓராண்டுக்கும் மேலாக இப்பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் இல்லை. வாரம் ஒரு முறை கூட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதில்லை. இப்பகுதியில் நிலத்தடி நீரின் தரத்தை ஆய்வு செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜல் ஜீவன் திட்டத்தில் வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள குழாய் இணைப்புகளில் உவர்ப்பு தன்மை உள்ள நீர் வினியோகிக்கின்றனர். இதனை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.
பலருக்கும் கல் அடைப்பு பாதிப்பு
ஜீவா, ராஜேந்திரா நகர்.
பெண்களுக்கு கழிப்பறை வசதி இல்லை. அரசு அமைத்துள்ள சுகாதார வளாகம் காட்சி பொருளாக மூடி வைத்துள்ளனர். இதனால் திறந்தவெளி கழிப்பிடங்களை பயன்படுத்துவதால் சுகாதாரப் பாதிப்பு ஏற்படுகிறது. சமுதாயக்கூடம், ராஜேந்திரா நகரின் கிழக்கு பகுதியில் கூடுதல் அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும். புதிதாக வீடு கட்டியவர்கள் குடிநீர், மின்சார வசதி பெற முடியாமல் தவிக்கின்றனர். இப்பகுதி நிலத்தடி நீரால் கிராம மக்கள் பலருக்கும் கல்லடைப்பு பாதிப்பு ஏற்படுகிறது.
இணைப்பு ரோடு அமைக்க இழுத்தடிப்பு
மலைச்சாமி, ராஜேந்திரா நகர்.
பல இடங்களில் தெருவிளக்குகள் எரியாததால் இரவில் தெருக்கள் இருளில் மூழ்கி உள்ளது. 2 கி.மீ., தூரம் உள்ள ஆத்தங்கரைபட்டி இணைப்பு ரோடு சீரமைப்பு பணியை பல மாதங்களாக அதிகாரிகள் கிடப்பில் போட்டு விட்டனர். இதனால் அரைகுறை பணி நடந்த ரோட்டில் விபத்தில் சிக்கி பலர் காயமடைகின்றனர். மூல வைகை ஆற்றில் பாலம் கட்டும் பணி முடிந்துவிட்டது. இணைப்பு ரோடு பணி முடிந்தால் ஆத்தங்கரைப்பட்டி, குப்பிநாயக்கன்பட்டி வழியாக தேனிக்கு எளிதில் செல்ல முடியும் என்றார்.
மேலும்
-
துாய்மை பணியாளர்களுக்கு உணவு வாங்கியதில் ரூ.67 லட்சம் பாக்கி மாநகராட்சி மீது அதிகாரிகள் கடுப்பு
-
எழும்பூர் ரயில் நிலையத்தில் பன்னடுக்கு வாகன நிறுத்தம் திறப்பு ஒரே நேரத்தில் 184 கார், 130 பைக் நிறுத்த வசதி
-
செங்காம்பு கறிவேப்பிலைக்கு புவிசார் குறியீடு வழங்குவதில் தாமதம் ஏன்?
-
வீடுகளுக்கு சேவை அளிக்கும் பணியாளர் தேர்வில் கவனம் போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
-
கொடி கட்டி வர்றாரு 'மக்களின் எம்.எல்.ஏ.,'
-
கோவையை ஆளப்போகிறது ஏ.ஐ!