இரு மகள்களை கழுத்தறுத்து கொன்ற 'பாச' தந்தை கைது
கான்பூர்: உத்தர பிரதேசத்தில் தன் இரு மகள்களை தந்தையே கழுத்தறுத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தந்தையை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் சஷி ரஞ்சன் மிஸ்ரா, 48. இவர் உத்தர பிரதேசத்தின் கான்பூரில் மருத்துவ விற்பனை பிரதிநிதியாக பணியாற்றுகிறார்.
இவர், கடந்த 2014ல் ரேஷ்மா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரேஷ்மா கான்பூரில் உள்ள பியூட்டி பார்லரில் பணியாற்றியபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்தனர்.
இந்த தம்பதிக்கு ரித்தி, 11, சித்தி, 11, என இரட்டை மகள்கள் இருந்தனர். இது தவிர 6 வயதில் ஒரு மகனும் உள்ளார்.
மனைவி மீது சந்தேகம் அடைந்த சஷி வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணித்து வந்துள்ளார். மேலும் தன் மகள்களின் அறைக்குள் மனைவி ரேஷ்மாவை அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு உணவுக்கு பின்னர் தன் மகள்களை படுக்கையறைக்கு அழைத்துச் சென்றார். அதிகாலையில் இருவரையும் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொன்றார்.
இரண்டு மணி நேரத்துக்கு பின் சஷி போலீசுக்கு போன் செய்து மகள்கள் இருவரையும் கொன்றுவிட்டதாக தெரிவித்தார். விரைந்து வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த இரட்டையர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து சஷியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் 'சஷி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், மனைவி மீதான சந்தேகத்தில் இந்த கொலை நடந்திருக்கலாம்' என போலீசார் தெரிவித்தனர்.
48 வயதில் என்ன திருமணம். இப்படி செய்தால் இப்படி தான் நடக்கும் என்று தெரியாதா?