எம்.எல்.ஏ., 'சீட்' தருவதாக ஏமாற்றினர்: ராமதாஸ் பேரன் முகுந்தன் ஆடியோவால் பரபரப்பு

10


-நமது நிருபர்-:

''எம்.எல்.ஏ., 'சீட்' தருவதாக ஏமாற்றினர்,'' என, ராமதாஸ் பேரனுடன், அன்புமணியின் ஆதரவாளர் பேசும் ஆடியோ, சமூக வலைதளத்தில் பரவி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமதாசின் மகள் வயிற்று பேரன் முகுந்தனுக்கு, பா.ம.க., இளைஞர் சங்கத்தில், மாநில தலைவர் பதவி வழங்கியதுதான், பா.ம.க., இரண்டாக உடைவதற்கு காரணமாக அமைந்தது.

முகுந்தன் தனக்கு வழங்கப்பட்ட பதவியை ராஜினாமா செய்து, ராமதாசுக்கு துணையாக தைலாபுரம் தோட்டத்தில் இருந்து வருகிறார். ஏப்., 17ல் தைலாபுரம் தோட்டத்தில், ஒரே சமயத்தில், ராமதாஸ், மூத்த மகள் ஸ்ரீகாந்தி, பேரன் முகுந்தன் ஒன்றாக செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினர்.

அதில் முகுந்தன் கூறும்போது, 'எனக்கு எம்.எல்.ஏ., சீட் தருவதாகவும், அதற்குண்டான செலவை ஏற்றுக்கொள்வதாகவும், அன்புமணி தரப்பினர் கூறினார். இதற்கான ஆதாரம், என்னிடம் இருக்கிறது.

அதை, விரைவில் வெளியிடுவேன். அன்புமணியை யாரும் நம்பாதீர்கள். அவர் பதவி வெறி, பணத்தாசை பிடித்தவர்' என, தெரிவித்தார்.

இந்நிலையில், அன்புமணி ஆதரவு பிரமுகரும், முகுந்தனும் உரையாடும் ஆடியோ ஆதாரம், சமூக வளைதளத்தில் பரவி வருகிறது. அதில், அந்த பிரமுகர் பேசுகையில், 'அன்புமணியிடம் கூறிவிட்டேன். உங்களுக்கு ஏதாவது ஒரு தொகுதியில் நிற்க வைத்து, எம்.எல்.ஏ.,வாக ஆக்குவதாகவும், அதற்கான செலவை அவரே ஏற்பதாகவும் கூறினார்.

உங்களுக்கு கட்சி பதவி வழங்குவது குறித்து, பின் பார்த்துக்கொள்ளலாம் என அன்புமணி கூறியுள்ளார்' என பேசுகிறார்.

அதற்கு முகுந்தன், பதில் ஏதும் கூறாமல், 'ஊம்' கொட்டுகிறார்.

தற்போது இந்த ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement