பெருந்துறை தொகுதியில் 10 ஆண்டில் 50 ஆண்டுக்கான வளர்ச்சி தந்தேன் மீண்டும் வாய்ப்பு கேட்ட தோப்பு வெங்கடாச்சலம்

பெருந்துறை,:பெருந்துறை தொகுதியில், 50 ஆண்டுகளின் வளர்ச்சியை, 10 ஆண்டுகளில் நிறைவேற்றி தந்த எனக்கு, மீண்டும் வாய்ப்பு தாருங்கள் என்று வேண்டுகோள் வைத்து, பெருந்துறை தொகுதி தி.மு.க., வேட்பாளர் தோப்பு வெங்கடாச்சலம், பெருந்துறை தெற்கு ஒன்றியப் பகுதிகளில், நேற்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

பொன்முடி, புதுபாளையம், சரளை, காசிபில்லாம்பாளையம், கம்புளியம்பட்டி, நாகப்ப கவுண்டன்பாளையம், செங்குட்டை, காசுகாரன்பாளையம், பாப்பம்பாளையம், கிரே நகர், கராண்டிபாளையம், பச்சாகவுண்டன்பாளையம், வீரசங்கிலி, வடமலைகவுண்டன்பாளையம், கைக்கோளபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஓட்டு சேகரித்து பேசியதாவது:
பெருந்துறை தொகுதி மக்களின், 50 ஆண்டு கோரிக்கைகளை, எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சராக இருந்தபோது நிறைவேற்றி தந்துள்ளேன். குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக கொடிவேரி குடிநீர் திட்டம் வருவதற்கும், நிலத்தடி நீர் மட்டம் உயர, அத்திகடவு அவினாசி திட்டம் வரவும் முழு முயற்சி மேற்கொண்டேன். பெருந்துறை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, முக்கிய சாலைகள், சந்திப்புகள், ரவுண்டானா அமைக்கப்பட்டது.
பெருந்துறை வார சந்தையில் நிரந்தர மேற்கூரையுடன் கூடிய, உள் கட்டமைப்பு வசதிகளுடன் ஒவ்வொரு வியாபாரிகளுக்கும் நிரந்தர இடம் ஒதுக்கி, மழை மற்றும் வெயிலில் இருந்து பொருட்கள், மக்களுக்கு பாதுகாப்பு செய்யப்பட்டது.
ஊர்கள், கிராமங்கள் தோறும் எண்ணற்ற பல திட்டங்களை கொண்டு வந்த எனக்கு மீண்டும் மக்கள் பணியாற்ற வாய்ப்பு வழங்க, உதயசூரியன் சின்னத்தில் ஓட்டளியுங்கள். இவ்வாறு பேசினார். மேலும், தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தரப்பட்ட வாக்குறுதிகளையும் விளக்கி கூறினார்.

Advertisement