சென்னை, பெங்களூரு நகரங்களில் கிடங்கு குத்தகை 58% அதிகரிப்பு

புதுடில்லி: சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய தென் மாநில நகரங்களில் தொழில்துறை மற்றும் கிடங்குகளுக்காக இடங்களை குத்தகை எடுப்பது கடந்த ஜன., முதல் மார்ச் வரை 58 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான கோலியர்ஸ் வெளியிட்டுள்ள தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோலியர்ஸ் வெளியிட்டுள்ள தரவு:

சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய மூன்று நகரங்களில் தொழில்துறை மற்றும் கிடங்குகளுக்கான குத்தகை பரப்பளவு, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இருந்த 31 லட்சம் சதுர அடியிலிருந்து, இந்த ஆண்டின் ஜனவரி- - மார்ச் காலகட்டத்தில் 49 லட்சம் சதுர அடியாக உயர்ந்துள்ளது.

பெங்களூருவில் தொழில்துறை மற்றும் கிடங்கு இடங்களின் குத்தகை, 8 லட்சம் சதுர அடியிலிருந்து 17 லட்சம் சதுர அடியாக கிட்டத்தட்ட இருமடங்கு உயர்ந்துள்ளது.

சென்னையில் 20 லட்சம் சதுர அடியிலிருந்து 23 லட்சம் சதுர அடியாக உயர்ந்துள்ளது. அதாவது குத்தகை செயல்பாடுகள் 15% உயர்ந்துள்ளது. ஹைதராபாதில் 3 லட்சம் சதுர அடியிலிருந்து 9 லட்சம் சதுர அடியாக, அதாவது மும்மடங்கு உயர்ந்துள்ளது.

லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்கள், இ- - காமர்ஸ் நிறுவனங்கள் மற்றும் இலகு உற்பத்தி நிறுவனங்களே இந்த உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளன.

இவ்வாறு தெரிவித்துஉள்ளது.

குத்தகை பரப்பளவு (சதுர அடி, லட்சத்தில்) பெங்களூரு 8 17 சென்னை 20 23 ஐதராபாத் 3 9 மொத்தம் 31 49

Advertisement