வடவர் படையெடுப்பை முறியடிப்போம்; சொல்கிறார் கமல்

127

கோவை: '' வாகை சூட வந்தால் வடவர் படையெடுப்பை முறியடிப்போம். வடக்கில் இருந்து வரும் துரோகத்தை நாம் தடுத்தே ஆக வேண்டும்,'' என்று ம.நீ.ம. தலைவர் கமல் கூறினார்.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து கமல் பேசியதாவது:கோவையில் 10 கி.மீ. நீள ஜி.டி.பாலத்தைப் பார்த்துப் பெருமையடைந்தேன். ஆனால், மத்திய அரசோ மக்கள் தொகை அதிகம் உள்ள இடங்களைப் புறக்கணித்துவிட்டு, தங்களுக்கு வேண்டிய இடங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டத்தைக் கொடுக்கிறது. இதுதான் அவர்களின் நீதி. வடக்கிலிருந்து வரும் துரோகத்தை நாம் தடுத்தே ஆக வேண்டும்.

தி.மு.க.வை ஓழிப்பேன் என்று சொல்லுபவர்களுக்கு பின்னால் ஒரே ஒரு முதலாளி இருகிறார். அவர் வடக்கே இருக்கிறார். அவரது அனுமதியுடன் அவரது மதியுடன் இவர்கள் செயல்படுகின்றனர். மதுரை வந்த மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ''எங்களுக்கு ஓட்டு போட்டால் எல்லாம் செய்வோம்'' என்று பேசி இருக்கிறார். இதற்கு பெயர் வாக்குறுதியா? பிளாக் மெயிலா? இந்த மிரட்டல் எல்லாம் தமிழகத்தில் நடக்காது. தமிழகத்தின் மிரட்டல் எப்படி இருக்கும் என்பதை லோக்சபாவில் இப்போது செய்து காட்டி இருக்கிறோம்.நாம் வந்தாரை வாழ வைப்போம், வாகை சூட வந்தால் வடவர் படையெடுப்பை முறியடிப்போம். வன்முறையில் நம்பிக்கை இல்லாதவர்கள் தமிழர்கள். ஆனால் சட்டத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள்.

இந்த தேர்தலில் மக்கள் அதை செய்து காட்டுவார்கள்.கோவை தெற்கு தொகுதி நான் போட்டியிட்ட தொகுதி. நான் இந்த தொகுதி மக்களை மறக்கமாட்டேன். 50 ஆயிரம் ஓட்டுக்களை எனக்கு அளித்த அன்பான மக்கள். நான் உறுதியாக சொல்கிறேன், எனக்கு ஓட்டு போட்ட அத்தனை பேரும் இந்த முறை செந்தில் பாலாஜிக்கு வாக்களிப்பார்கள்.தமிழக அரசியல் வரலாற்றில் கோவை ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கப்போதுகிறது. தி.மு.க.வுக்கு சென்னையில் செயின்ட் ஜார்ஜ் கோட்டை இருப்பது போல் இங்கேயும் ஒரு கோட்டை உருவாக போகிறது. அதற்கான திட்டம் நடக்கிறது.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement