'கர்நாடக போலீஸ் அதிகாரிகள் துன்புறுத்தப்படுகின்றனர்' டி.ஜி.பி., சலீமுக்கு எஸ்.பி., காசிநாத் பரபரப்பு கடிதம்

பெங்களூரு: 'கர்நாடகாவில் பணியாற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த ஐ.பி.எஸ்., அதிகாரிகளால், கர்நாடக போலீஸ் அதிகாரிகள் துன்புறுத்தப்படுகின்றனர்' என்று, டி.ஜி.பி., சலீமுக்கு, மனித உரிமைகள் ஆணைய எஸ்.பி., காசிநாத் கடிதம் எழுதி உள்ளார்.

கர்நாடக போலீஸ் டி.ஜி.பி., சலீமுக்கு, டி.சி.ஆர்.இ., எனும் மனித உரிமைகள் ஆணையத்தில் எஸ்.பி.,யாக பணியாற்றும் காசிநாத் எழுதியுள்ள கடிதம்:

கர்நாடகாவில் பணியாற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த ஐ.பி.எஸ்., அதிகாரிகளால், கர்நாடகாவை சேர்ந்த ஐ.பி.எஸ்., உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் வேண்டுமென்றே துன்புறுத்தப்படுகின்றனர். மங்களூரு போலீஸ் கமிஷனர் சுதிர் குமார் ரெட்டி, தன் கீழ் பணியாற்றும், கர்நாடக அதிகாரிகளை வேண்டும் என்றே துன்புறுத்துகிறார்.

இவரை போன்று பல வெளிமாநில அதிகாரிகள் தொல்லை அதிகமாக உள்ளது. இதுபற்றி முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் ஆகியோரை நேரில் சந்தித்து, விளக்கம் அளிக்க நினைக்கிறேன்.

அவர்களை சந்தித்து பேச எனக்கு அரை மணி நேரம் மட்டும் வாங்கி கொடுங்கள். கர்நாடக அதிகாரிகள் எப்படி எல்லாம் துன்புறுத்தப்படுகின்றனர் என்பதை ஆதாரத்துடன் வெளிப்படுத்துகிறேன்.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, பெங்களூரு மனித உரிமை கள் ஆணைய மேற்கு மண்டல போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் சீனிவாஸ், மனித உரிமைகள் ஆணைய டி.ஜி.பி., உமேஷ் குமாருக்கு எழுதியுள்ள கடிதத்தில், 'மனித உரிமை கள் ஆணைய மத்திய அலுவலகத்தில் எஸ்.பி., கரிபசன கவுடா, டி.எஸ்.பி., மகேஸ்வர் கவுடா ஆகியோர், தலித் சமூகத்தை சேர்ந்த என்னை தொடர்ந்து துன்புறுத்துகின்றனர்.

உயர் ஜாதியை சேர்ந்தவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய கூடாது என்று என்னை துன்புறுத்துகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறி உள்ளார்.

ஆனால், தன் மீதான குற்றச்சாட்டை எஸ்.பி., கரிபசன கவுடா மறுத்து உள்ளார். 'சீனிவாஸ் கூறும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை. அவர் கடந்த மாதம் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

'இதனை எதிர்த்து கர்நாடக நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். தற்போது வேலை செய்யும் இடத்தில் நீடிக்க என் மீது பழி போடுகிறார். டி.எஸ்.பி., மகேஸ்வர் கவுடாவை நான் அடிக்கடி சந்திப்பதே இல்லை' என்று கூறி இருக்கிறார்.

Advertisement