இரவு பகலாக உண்ணாவிரதம் இருந்து தி.மு.க.,விடம் சீட்டு வாங்கிய காங்., ஜான்பாண்டியன் பேச்சு

முதுகுளத்துார்: தி.மு.க., கூட்டணியில் சீட்டு பெறுவதற்கு இரவு பகலாக உண்ணாவிரதம் இருந்து காங்., 28 சீட்டுகளை பெற்றனர் என்று த.ம.மு.க., நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் பேசினார்.

முதுகுளத்துார் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் மலேசியா பாண்டியை ஆதரித்து தேரிருவேலி, பேரையூரில் த.ம.மு.க., நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:

தே.ஜ., கூட்டணியில் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து கூட்டணி அமைத்துள்ளோம். ஆனால் தி.மு.க., கூட்டணியில் உள்ள காங்., 28 சீட்டுக்கு இரவு, பகலாக உண்ணாவிரதம் இருந்து பெற்றனர். வி.சி., கட்சி காவடி எடுத்து 6 சீட்டு பெற்றது. தற்போது வரை கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு தான் இருந்து வருகிறது.

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றிக் கூட்டணியாக உள்ளது. தி.மு.க., அரசு பரமக்குடியில் இமானுவேல் சேகரன் மணிமண்டபத்தை திருமணம் மண்டபம் போல் கட்டி சமுதாயத்தை அசிங்கப்படுத்தி உள்ளனர். தி.மு.க., ஆட்சியில் திருப்புவனத்தில் காவலாளி அஜித்குமாரை போலீசார் அடித்துக் கொலை செய்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நடந்துள்ளது.

தி.மு.க., ஆட்சியில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது. எனவே வரும் தேர்தலில் தே.ஜ., கூட்டணி கட்சியினருக்கு ஓட்டளித்து வெற்றி பெற செய்து தி.மு.க.,வினரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றார்.

---

Advertisement