தமிழகம் அமைதி பூங்காவாக திகழ தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஓட்டளியுங்கள் பா.ம.க., வேட்பாளர் செழியன் வேண்டுகோள்

ரிஷிவந்தியம்: போதை கலாச்சாரம், கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் இருந்து விடுபட்டு தமிழகம் அமைதி பூங்காவாக திகழ வேண்டும் எனில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு ஓட்டளிக்க வேண்டுமென பா.ம.க., வேட்பாளர் செழியன் கூறியுள்ளார்.

ரிஷிவந்தியம் தொகுதி பா.ம.க., வேட்பாளர் செழியன் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 5 ஆண்டு கால தி.மு.க., ஆட்சியில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது. எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை, போதை கலாச்சாரம் இருப்பதாக தி.மு.க., கூட்டணியில் உள்ள தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதாவே ஒப்புக்கொண்டார்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 69 பேர் உயிரிழந்த சம்பவத்தை மக்கள் மறந்து விடக்கூடாது. அரசு சான்றிதழ்கள் மற்றும் திட்டங்களை பெற வேண்டுமெனில் பொதுமக்கள் கட்டாயம் லஞ்சம் தர வேண்டிய சூழல் உள்ளது. ஒப்பந்த பணிகளை செய்வதில் ஊழல் இருப்பதால் ரிஷிவந்தியம் தொகுதியில் தரமற்ற முறையில் வளர்ச்சி திட்ட பணிகள் நடந்துள்ளன. விண்ணை முட்டும் அளவிற்கு விலைவாசி உயர்ந்துள்ளதால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதை சமாளிக்க ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 ஆயிரம் தருவதாக அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், குல விளக்கு திட்டத்தின் கீழ் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.2 ஆயிரம், ஆண்களுக்கு கட்டணமில்லா பஸ் வசதி, நுாறு நாள் வேலைத்திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும், மகளிர் பைக் வாங்க மானியம், முதியோர் மாத ஓய்வூதியம் உயர்வு, விலையில்லா ஆடு, மாடு, ஆண்டுதோறும் 3 விலையில்லா காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கும், விவசாயத்திற்கும் முக்கியத்துவம் அளித்து பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளது. போதை கலாச்சாரம் ஒழிந்து, தமிழகம் அமைதி பூங்காவாக திகழ தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும், ரிஷிவந்தியம் தொகுதியில் மாம்பழம் சின்னத்திற்கு ஓட்டளிக்க வேண்டும் என செழியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement