சின்மய அமிர்த யாத்திரை ரதம் ; உடுமலைக்கு வருகை 

உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவிலுக்கு வந்த, சின்மய அமிர்த யாத்திரை ரதத்துக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.

அகில பாரதிய சின்மயா யுவகேந்திரா சார்பில், 'எழுச்சிமிகு பாரதம்' என்ற நோக்கில் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, 'சின்மய அமிர்த யாத்திரை' நடந்து வருகிறது.

இந்த யாத்திரை ரதம், உடுமலை மாரியம்மன் கோவிலுக்கு வருகை தந்தது. ரதத்துக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.

ரதத்தில் சுவாமி சின்மயானந்தர் உருவச்சிலைக்கும், பாதுகைக்கும் பல்வேறு ஆன்மிக அமைப்புகள் சார்பில் மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.

கடந்தாண்டு டிச., 31ல், புனேயில் துவங்கிய இந்த யாத்திரை, இந்தாண்டு அக்., 23ல், டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நிறைவு பெற உள்ளது. இதில், 295 நாட்களில், 35 ஆயிரம் கிலோமீட்டர் இந்த ரதமானது இந்தியா முழுவதும் பயணம் செய்கிறது.

உடுமலை வந்த யாத்திரை ரதத்துக்கு, மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் ஸ்ரீதர் சார்பில், பரிவட்ட மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து, ஆரத்தி மற்றும் சின்மய அஷ்டோத்தகம் பாடி புஷ்பாஞ்சலி செய்யப்பட்டது.

இந்த ரத யாத்திரையில் ஆனைமலை ஆர்ஷ வித்யா பீடம் பூஜ்ய ஸ்ரீ சுவாமி ததேவானந்த சரஸ்வதி தலைமையில், சுவாமி அனுகூலானந்தா, தவத்திரு அஜித் சைதன்யா சுவாமிகள், சுவாமி சம்பிரதிஷ்டானந்தா, சுவாமி வேதாந்த ஆனந்தா முன்னிலை வகித்தனர்.

உடுமலை ஆர்ஷவித்யா பீடம், விஸ்வ ஹிந்து பரிஷத், தத்துவ ஞான சபை, தர்ம ரக்ஷன ஸமிதி, கார்த்திகை விழா மன்றம், தெய்வீகப்பேரவை, ஆன்மிகப் பேரவை மற்றும் பல்வேறு திருக்கோவில் அமைப்பினர் பங்கேற்றனர்.

ரதயாத்திரையை உடுமலை ஆர்ஷ வித்யா பீடம் ஆறுமுகம் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.

Advertisement