ஆனைமலையில் கலைக்கல்லுாரி :தி.மு.க., வேட்பாளர் சுதாகர் உறுதி

வால்பாறை: வால்பாறை தொகுதிக்கு உட்பட்ட, ஆனைமலை சுற்றுவட்டாரப்பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட தி.மு.க., வேட்பாளர் சுதாகருக்கு, மக்கள் ஆரத்தி எடுத்தும், மலர் துாவியும் வரவேற்பு அளித்தனர்.

மேற்கு ஒன்றிய செயலாளர் தேவசேனாதிபதி, கிழக்கு ஒன்றிய செயலாளர் யுவராஜ்,மத்திய ஒன்றிய செயலாளர் அண்ணாத்துரை, வடக்கு ஒன்றிய செயலாளர் யுவராஜ், கோட்டூர் பேரூராட்சி செயலாளர் ராமகிருஷ்ணன், ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைசெல்வி சாந்தலிங்ககுமார், வேட்டைக்காரன்புதுார் பேரூராட்சி செயலாளர் பார்த்திபன், ஒடையகுளம் பேரூராட்சி செயலாளர் சோமசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வேட்பாளர் சுதாகர் பேசியதாவது:

வால்பாறை தொகுதி மக்களின் பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்படும். பி.ஏ.பி., திட்டத்தில் நிலுவையில் உள்ள ஆனைமலை - நல்லாறு திட்டம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். வால்பாறை மலைப்பகுதியில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும். பணி ஓய்வு பெறும் தோட்ட தொழிலாளர்களுக்கு குடிசை மாற்றுவாரியத்தின் சார்பில் வீடு கட்டித்தரப்படும்.

வால்பாறையில் படித்த மாணவியர் பயன்பெறும் வகையில் நர்சிங் கல்லுாரியும், படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தேயிலை அல்லாத மாற்றுத்தொழில் அமைக்கவும் நடவடிக்கை எடுப்பேன்.

ஆனைமலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, அரசு பொறியியல் கல்லுாரி அமைக்க பாடுபடுவேன். தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கவும், விவசாயிகளின் நலன் பாதுகாக்கவும் நடைபெறவுள்ள சட்ட சபை தேர்தலில் தி.மு.க.,வுக்கு ஓட்டு போட்டு, அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

25 ஆண்டுகளுக்கு பின், தொகுதியில், வால்பாறையை சேர்ந்த எனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்த தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோருக்கு வெற்றியை சமர்ப்பிப்போம்.

இவ்வாறு, பேசினார்.

Advertisement