ஓட்டுப்பதிவுக்காக தயாராகும் அதிகாரிகள்:  பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

உடுமலை: ஜனநாயக திருவிழாவின் முக்கிய நிகழ்வான, ஓட்டுப்பதிவு வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளில், நுாறு சதவீத ஓட்டுப்பதிவு இலக்கை அடையவேண்டும் என்கிற இலக்குடன், ஓட்டுப்பதிவு பணிகளில் ஈடுபட, தேர்தல் பணியாளர்கள், போலீசார் உள்பட, 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தயார் நிலையில் உள்ளனர்.

சட்டசபைத் தேர்தல் வரும் 23ல் நடக்கிறது. உடுமலை, மடத்துக்குளம் தொகுதியில், தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் போர்க்கால அடிப்படையில் முடித்துள்ளது.

நுாறு சதவீத வாக்குப் பதிவு என்ற இலக்கை எட்ட, 4 ஆயிரம் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். உடுமலை தொகுதியில், 11 வேட்பாளர்களும், மடத்துக்குளம் தொகுதியில், 13 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் அறிக்கைகளை முன்வைத்து, கோடை வெயிலையும் மிஞ்சும் வகையில் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உடுமலையில், 307 ஓட்டுச்சாவடிகளும், மடத்துக்குளத்தில், 294 ஓட்டுச்சாவடிகளும் அமைக்கப்பட்டு, அனைத்து வாக்குச்சாவடிகளிலும், சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டு முழுமையான கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. 300க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.

தொகுதிக்கு ஒரு, 'பிங்க்' நிற மகளிர் வாக்குச்சாவடிகள் பிரத்யேகமாக அழகுபடுத்தப்பட்டு தயார் செய்யப்பட்டு வருகின்றன.

ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், வேட்பாளர்களின் பெயர், போட்டோ, சின்னம் ஆகியவற்றுடன் கூடிய பேலட் பேப்பர் பொருத்தப்பட்டு, பேலட் யூனிட், கன்ட்ரோல் யூனிட் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் என அனைத்து இயந்திரங்களும் தொழில்நுட்ப வல்லுனர்களால் ஆய்வு செய்யப்பட்டு, தயார் நிலையில் உள்ளன.

ஓட்டுப்பதிவு பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு, மூன்று கட்டப்பயிற்சிகள் அளித்து முடிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்களுக்கு வீடு தேடிச்சென்று தபால் வாக்குப்பதிவு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

வரும் 23-ம் தேதி காலை, 6:00 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடைபெறும். காலை, 7:00 முதல் மாலை, 6:00 மணி வரை பொதுமக்கள் வாக்களிக்கலாம்.

வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள, 12 வகையான ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக்காட்டி வாக்களிக்கலாம்.

Advertisement