ரூ. 8 ஆயிரம் கூப்பனில் பொருளாதார தத்துவம் : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

காரியாபட்டி:''ரூ. 8 ஆயிரம் கூப்பனை இலவசமாக தரவில்லை. அதற்கு பின் பொருளாதார தத்துவம் இருக்கிறது என்பதை அறிந்து தான் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார் ,''என காரியாபட்டியில் தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் தெரிவித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: சின்னஞ்சிறு ஊராக இருந்த காரியாபட்டி, தற்போது நகராட்சி அந்தஸ்துக்கு உயர்ந்து நிற்கிறது. அது மட்டுமல்ல தாலுகாவின் தலைநகரமாக மாற்றி, பஸ் டெப்போ , பஸ் ஸ்டாண்டு விரிவாக்கம், நீதிமன்றம், ரோடு வசதி என எண்ணற்ற திட்டங்கள் மூலம் அருமையான நகரமாக மாறியிருக்கிறது.

குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வைகை கூட்டு குடிநீர் திட்டத்தை ஏற்படுத்தி, ரூ. 75 கோடி மதிப்பீட்டில், பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. தேர்தலுக்குப் பின் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தாமிரபரணி குடிநீரும், வைகை ஆற்று குடிநீரும் காரியாபட்டியில் சங்கமிக்கிறது. இங்கு அமைக்கப்பட இருந்த கல்லூரியை வேறு பகுதிக்கு மாற்றினர். மீண்டும் இந்த பகுதிக்கு அரசு கலை கல்லூரியை கொண்டு வந்தேன். நிலையூர் கம்பிக்குடி கால்வாய் திட்டம், கிருதுமால் நதி சீரமைப்பு என ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறேன்.

இரவு நேரத்தில் 10 மணிக்கு மேல் பஸ் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ரூ. 8 ஆயிரம் கூப்பனை எந்த கடையிலும் கொடுத்த பொருள் வாங்கிக் கொள்ளலாம். அதற்குப் பின் ஒரு பொருளாதார தத்துவம் இருக்கிறது. ஆர்டர் கொடுத்தால் பொருட்கள் உற்பத்தி அதிகரிக்கும். வேலைவாய்ப்பு கிடைக்கும். அரசுக்கு நிறுவனங்கள் வரி செலுத்தும். தமிழகத்தின் பொருளாதாரம் உயரும். எனவே தான் இந்த திட்டம் சாத்தியம் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அனைத்து திட்டங்களும் பொருளாதார வல்லுநர்களால் ஏற்படுத்தப்பட்ட திட்டங்கள்.

2010ல் கருணாநிதி ஆட்சிக்குப் பின் ஸ்டாலின் ஆட்சியில் தான் 11:19 இரட்டை இலக்க பொருளாதாரத்தை பெற்றிருக்கிறது.மீண்டும் இந்தப் பகுதியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த நீங்கள் ஆதரவு தர வேண்டும். உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும், என்றார்.

Advertisement