சட்டசபை தேர்தலை முன்னிட்டு அள்ளி வீசப்பட்ட வாக்குறுதிகள்: நிறைவேறினால் மகிழ்ச்சியே

சாயல்குடி: முதுகுளத்துார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் வேட்பாளர்கள் தேர்தல் நேர கடைசி பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டனர்.

அதிக சத்தம் எழுப்பக்கூடிய ஒலிபெருக்கியை முன்னே வைத்துக் கொண்டு யாருக்கு அதிக படை பலம் உள்ளது என்பதை நிரூபிப்பதற்காக ரோடு ஷோ உள்ளிட்டவைகளை செய்து காட்டினார். அப்பகுதி மக்கள் கூறியதாவது:

பொதுவாக தேர்தல் காலங்களில் ரெடிமேடாக வைத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகள் மட்டுமே ஒலிக்கப்படுகிறது. வேட்பாளரின் கவனத்திற்கு வராத வாக்குறுதிகளும் இவற்றில் அடக்கமாக உள்ளது. நிறைவு நாளான நேற்று நகர் பகுதிகள் மற்றும் கிராமங்கள் தோறும் தங்கள் கட்சியின் பலத்தை காண்பிப்பதற்காக அரசியல் கட்சியினர் போட்டி போட்டுக் கொண்டு பிரசாரம் செய்கின்றனர்.

யாராக இருந்தாலும் சரி ஜெயித்தவுடன் சொன்னதை செய்யக்கூடிய வேட்பாளருக்கு பொதுமக்கள் மத்தியில் தனி செல்வாக்கு நிலவும். சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை போல சொல் ஒன்று செயல் வேறாக இருக்கக்கூடிய வேட்பாளர்கள் தங்களது போக்கை முற்றிலுமாக மாற்றிக் கொள்ள வேண்டும். இது தேர்தல் காலத்து அரசியலாக இருந்தாலும் தேர்தலுக்கு முன்பிருந்தே பொதுமக்களை சந்தித்து அவர்களுக்கான தேவைகளுக்கு குரல் கொடுப்பதே அரசியல்வாதிகளுக்கு உரிய தகுதியாக இருக்க வேண்டும்.

மொத்தத்தில் கிராம மக்களின் அடிப்படைத் தேவைகளும் சொன்ன வார்த்தைகளும் நிறைவேறினால் மகிழ்ச்சியே என்றனர்.

---

Advertisement