ரூ.80 லட்சம் நிலமோசடி வழக்கில் சாட்சி கையெழுத்திட்டவர் கைது
ஆவடி:நில மோசடி வழக்கில் சாட்சி கையெழுத்திட்டு தலைமறைவான குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
வடபழனியை சேர்ந்தவர் நவீனன், 34. இவரது தாத்தா ராஜேந்திரன் என்பவர், 1984ல் வெள்ளானுார், ஞானராஜ் நகரில் உள்ள, 5,469 சதுர அடி நிலத்தை சுப்பையா என்பவரிடம் இருந்து வாங்கி அனுபவித்து வந்தார்.
ராஜேந்திரன் இறந்தபின், அந்த நிலம் பேரன் நவீனன் பராமரிப்பில் இருந்தது. இந்த நிலத்தை கடந்த ஆண்டு விற்க வில்லங்கச் சான்று போட்டு பார்த்தபோது, நில மோசடி நடந்தது தெரிந்தது.
விசாரணையில், 2022ல், மீரா மொய்தீன் என்பவர், போலி ஆவணங்கள் தயாரித்து, சுப்பையா போல் ஆள்மாறாட்டம் செய்து, இரண்டாக பிரித்து நிர்மலா, மாரியப்பன் ஆகியோருக்கு விற்றுள்ளார்.
இதில், பாரத் குமார், சசிகுமார், சையது இப்ராஹிம் ஆகியோர் சாட்சி கையெழுத்து போட்டது தெரிந்தது. இந்த நிலத்தின் மதிப்பு 80 லட்சம் ரூபாய்.
நில மோசடி குறித்து, கடந்த ஆண்டு நவீனன், ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரை விசாரித்த இன்ஸ்பெக்டர் பாலன் தலைமையிலான தனிப்படை போலீசார், நில மோசடிக்கு உடந்தையாக சாட்சி கையெழுத்து போட்டு தலைமறைவாக இருந்த ஓசூர், மதன கொண்ட பள்ளியைச் சேர்ந்த சையது இப்ராஹிம், 47, என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர்மீது, மற்றொரு நில மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது.
***