ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜர் கோவில் தேரோட்டம் கோலாகலம்
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜர் கோவில் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில், 1017ம் ஆண்டு, சித்திரை மாதம் திருவாதிரை நட்சதிரத்தில் அவதரித்தவர் வைணவ மகான் ராமானுஜர்.
ராமானுஜரின் அவதார தலமான ஸ்ரீபெரும்புதுாரில், ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, தானுகந்த திருமேனியாக ராமானுஜர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இக்கோவிலில், ராமானுஜரின் 1009வது அவதார சித்திரை பிரம்மோற்சவ திருவிழா, ஏப், 13ல் தொட்கியது. தொடர்ந்து, தங்கப்பல்லக்கு, யாளி வாகனம், மங்களகிரி, சிம்ம வாகனம், ஹம்ச வாகனம், குதிரை வாகனம், சூர்யபிரபை உள்ளிட்ட வாகனங்களில் ராமானுஜர் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் ஒன்பதாம் நாளான நேற்று, தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய ராமானுஜர், தேரடி, காந்தி சாலை, திருவள்ளூர் பிரதான சாலை, திருமங்கையாழ்வார் சாலை வழியாக பவனி வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஆயிரக்கணக்காண பக்தர்கள் பங்கேற்று, ‛கோவிந்தா, கோவிந்தா' முழக்கத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
சாலை முழுதும் பெண்கள் கோலமிட்டு தேருக்கு வரவேற்பு அளித்தனர். ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் வேடமணிந்து, பக்தர்கள் பஜனை பாடி சென்றனர்.
ஆண், பெண் பக்தர்கள் பஜனை பாடி, நடனமாடி தேர் திருவிழாவை கொண்டாடினர். தேருக்கு முன் சென்ற ராமானுஜர் கோவில் யானை கோதையிடம் ஏராளமான பக்தர்கள் ஆசிர்வாதம் பெற்று செல்பி எடுத்தனர். பக்தர்களுக்கு அன்னதானம், மோர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர். அடுத்த 10 நாட்கள் நடைபெற உள்ள ஆதிகேசவப் பெருமாள் உத்சவம் மே 1ல் தொடங்குகிறது.
மேலும்
-
பா.ஜ., விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் புவனேஸ்வரி தி.மு.க., வில் ஐக்கியம்
-
நல்லாட்சி அமைய அ.தி.மு.க., வுக்கு வாக்களியுங்கள்; வேட்பாளர் குமரகுரு பேச்சு
-
அனுமதியின்றி சைக்கிள் பேரணி: த.வெ.க., வேட்பாளர் மீது வழக்கு
-
சேவை செய்ய வாய்ப்பு தாருங்கள் : பா.ம.க., வேட்பாளர் செழியன் வேண்டுகோள்
-
பணத்தை வீசி சென்ற கட்சியினர் கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை
-
தி.மு.க, ஆட்சியில் விவசாயிகள் தொடர் பாதிப்பு: ஸ்ரீதர் வாண்டையார் குற்றச்சாட்டு