பிரதான கால்வாய் புதுப்பிப்பு எப்போது? வாக்குறுதி மட்டும் மாறல
உடுமலை: பல லட்சம் ஏக்கர் பாசனத்திற்கு, ஆதாரமான பி.ஏ.பி., பிரதான கால்வாயை புதுப்பிக்கும் திட்டம், தேர்தலுக்கு தேர்தல் வாக்குறுதியாகவே தொடர்வதால், இரு மாவட்ட விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.
பி.ஏ.பி., பாசனத்திட்டத்தின் வாயிலாக, திருப்பூர், கோவை மாவட்டத்திற்குட்பட்ட 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இத்திட்டத்தில், தொகுப்பு அணைகளிலிருந்து பெறப்படும் தண்ணீர், திருமூர்த்தி அணையில், தேக்கி வைக்கப்பட்டு, பிரதான கால்வாய் வாயிலாக, இரு மாவட்ட விளைநிலங்களின் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்படுகிறது.
திருமூர்த்தி அணையிலிருந்து துவங்கி, திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் வரை, 124 கி.மீ., துாரம் பயணிக்கும் பிரதான கால்வாயே, இப்பாசன திட்டத்தின் ஆதாரமாக உள்ளது.
இந்த கால்வாயில், குறிப்பிட்ட இடைவெளிகளில், நான்கு மண்டல பாசனத்திற்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது. பயன்பாட்டிற்கு வந்து, பல ஆண்டுகளாகியும், புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல், கால்வாய் கரைகள் மண் பரப்பாக மாறி வருகிறது.
அணையிலிருந்து துவங்கி, 15 கி.மீ., தொலைவிற்குள், பல இடங்களில், கரைகள் அரிக்கப்பட்டு, அதிகளவு தண்ணீர் விரயமாகி வருகிறது.
குறிப்பாக, 11வது கி.மீ., லிருந்து குறிப்பிட்ட துாரம் வாய்க்கால் கரைகள், மரங்கள் வளர்ந்து, கரை, வெறும் கற்களாக காட்சியளிக்கின்றது.
இத்தகைய அவலங்களால், மண்டல பாசனத்திற்கு, திருமூர்த்தி அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் விரயமாகி, கடைமடை பகுதிகள் பாதிக்கப்படுகின்றன. வலுவில்லாத கரைகளால், கால்வாயில் மொத்த கொள்ளளவான வினாடிக்கு ஆயிரம் கன அடி திறக்கப்படுவதில்லை.
இதனால், நீர் நிர்வாகத்திலும் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. பராமரிப்பில்லாத கரைகள் தண்ணீர் திருட்டிற்கு ஏதுவாக இருப்பதும், பாசனத்தில் பிரச்னைகளை உருவாக்குகின்றன.
பி.ஏ.பி., திட்டம் நான்கு மண்டலமாக விரிவுபடுத்தப்பட்ட பின்னர், இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே விளைநிலங்களுக்கு தண்ணீர் கிடைக்கிறது. சுற்றுகள் அடிப்படையில், தண்ணீர் திறக்கப்படுவதால், ஒரு ஏக்கருக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே தண்ணீர் வழங்கப்படுகிறது.
இதனால், பி.ஏ.பி., பாசன காலத்தின் போதும், விளைநிலங்களை தரிசாக விடும் அவலம், கோவை, திருப்பூர் மாவட்டங்களில், அதிகரித்து வருகிறது.
விவசாயிகள் கூறுகையில், பி.ஏ.பி., பிரதான கால்வாயின் அவல நிலையால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. பிரதான கால்வாயை சிறப்புத்திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கி புதுப்பிக்க வேண்டும். மண்டல பாசனங்களின் இடைவெளியில், புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளலாம். சட்டசபை தேர்தலின் போது, பி.ஏ.பி., திட்டத்தில், நிலவும் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என வாக்குறுதி அளிக்கின்றனர்', என்றனர்.