தி.மு.க.,வின் ஆட்டம் 'குளோஸ்': அ.தி.மு.க., தாமோதரன் பேச்சு

கிணத்துக்கடவு: இந்த தேர்தலோடு தி.மு.க.,வின் ஆட்டம் முடிந்து விடும், என, அ.தி.மு.க., வேட்பாளர் தாமோதரன் பேசினார்.

கிணத்துக்கடவு சட்டசபை தொகுதி சுந்தராபுரம் சுற்றுப்பகுதிகளில் அ.தி.மு.க., வேட்பாளர் தாமோதரன் பிரசாரம் செய்து மக்களிடையே ஓட்டு சேகரித்தார். இந்த பிரசாரத்தில், கட்சி பொறுப்பாளர்கள், கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

வேட்பாளர் தாமோதரன் பேசியதாவது:

2021 தேர்தலில், ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் கலைஞர் உணவகம் கொண்டு வரப்படும், காஸ் சிலிண்டர் மானியம், மாதம் ஒரு முறை மின்கட்டணம், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் இப்படி பல அறிவிப்புகளை கூறி தி.மு.க.,வினர் ஆட்சியமைத்தனர்.

இந்த அறிவிப்புகளில் 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. தி.மு.க., மக்களிடையே நல்ல பெயரை சம்பாதிக்கவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன், தி.மு.க., சார்பில் திருச்சி மாவட்டத்தில், 8 ஆயிரம் ரூபாய் மாதிரி டோக்கன் வழங்கப்பட்டது. அதை ஒரு தலித் பெண் பெற்றார். அதற்கு தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் அப்பெண்ணை இழிவாகப் பேசியதால், மனமுடைந்து அந்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.

இது பற்றி திருமாவளவன் ஏதாவது பேசி இருப்பாரா. காரணம் அவர் தி.மு.க.,வோடு கூட்டணியில் இருக்கிறார். ஜாதி, மதம் கிடையாது என, கூறும் கட்சியிலே இதுபோன்ற நிலைமை நடக்கிறது.

இந்த நிலைமை நாளை நமக்கும் நடக்க வாய்ப்புள்ளது. இந்த தேர்தல் முடியும் போது தி.மு.க.,வின் ஆட்டமும் முடிந்து விடும். எனவே, மக்கள் அனைவரும் சிந்தித்து அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்க வேண்டும்.

கொரோனா காலகட்டத்தில் அம்மா உணவகம் வாயிலாக பெரும்பாலான மக்கள் பயனடைந்தனர். நமது ஆட்சி அமைந்த பின், மீண்டும் அம்மா உணவகம் செயல்படுத்தப்படும்.

உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்பு மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில், ஸ்டெம் கல்வி மையங்கள் கொண்டுவரப்படும்.

6 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த பாடம், பாடத்திட்டத்தில் புதிதாக சேர்க்கப்படும்.

இவ்வாறு, தாமோதரன் பேசினார்.

Advertisement