இறுதிக்கட்ட பிரசாரத்தை முடித்த வேட்பாளர்கள் ஒரே இடத்தில் கூடியதால் ஸ்தம்பித்தது    * ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு   

சிவகங்கை:சிவகங்கை தொகுதி வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் அரண்மனைவாசலில் இறுதி கட்ட பிரசாரத்தை முடிக்க கூடியதால் வாகனங்கள் ரோட்டில் நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சிவகங்கை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., நகர் முழுவதும் சுற்றிவந்து எம்.ஜி.ஆர்., சிலை, அரண்மனைவாசல் வழியாக சிவன் கோயிலில் பிரசாரத்தை முடித்தார். அ.தி.மு.க., த.வெ.க., நாம் தமிழர், அ.இ.பு.த.ம.மு.க., உட்பட அனைத்து வேட்பாளர்களும் இறுதி கட்ட பிரசாரத்தை அரண்மனைவாசலில் முடிக்கும் வகையில் தேர்தல் அலுவலர் அனுமதி அளித்துவிட்டனர்.

நேற்று மாலை 4:35 மணிக்கு சிவன்கோயில் வழியாக அரண்மனைவாசல் வந்த தி.மு.க., வேட்பாளர் கருணாஸ் மற்றும் கட்சியினரின் வாகனங்களை அரண்மனைவாசலில் நிறுத்தி மாலை 5:25 வரை பேசிக்கொண்டிருந்தனர். அதற்கு பின் வந்த வேட்பாளர்கள் அரண்மனை வாசலில் பிரசாரத்தை முடிக்க முடியாமல் காத்திருந்தனர். அரண்மனை வாசலில் அனைத்து வேட்பாளர்கள், கட்சியினர் வாகனங்களும் நிறுத்தப்பட்டன. இதனால் பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியூருக்கு செல்லும் பஸ்கள், பிற வாகனங்கள் செல்ல முடியாமல் மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இந்துஜாவிற்கு மாலை 5:00 முதல் 5:30 மணிக்குள் அரண்மனைவாசலில் பிரசாரத்தை முடிக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், தி.மு.க., வேட்பாளர் அங்கிருந்து புறப்படாமல் பேசிக்கொண்டே இருந்ததால், அனுமதி பெற்ற நேரத்திற்கு அரண்மனைவாசலுக்கு வந்த நாம் தமிழர் கட்சியினர் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பினரும் ஒரே இடத்தில் பிரசாரம் செய்ததால், போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதையடுத்து தி.மு.க., வேட்பாளர் கருணாஸ் அவரது ஆதரவாளர்களின் வாகனங்கள் அரண்மனைவாசலில் இருந்து புறப்பட்டு மதுரை முக்கு காளியம்மன் கோயிலில் நிறைவு செய்தனர்.

அங்கும் மானாமதுரை ரோட்டில் தி.மு.க.,வினர் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு செய்ததால், மானாமதுரை மற்றும் மதுரை செல்லும் வாகனங்கள் செல்ல முடியாமல் மதுரை முக்கில் போக்குவரத்து பாதிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து த.வெ.க., வேட்பாளர் குழந்தைராணியும் அவரது கட்சியினரும் அரண்மனைவாசலில் பிரசாரத்தை முடித்தார். கூடுதல் எஸ்.பி., பிரான்சிஸ், டி.எஸ்.பி., அமலஅட்வின் ஆகியோர் தலைமையில் துப்பாக்கி ஏந்திய எல்லை பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ///

Advertisement