'சிறுபான்மையினர் ஓட்டுகள் தி.மு.க.,வுக்கு செல்லாமல் தடுக்க விஜயை நிறுத்தி உள்ளனர்'

20

தஞ்சாவூர்: ''ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினருடன் த.வெ.க., தலைவர் விஜய்க்கு நெருக்கமான உறவு இருக்கிறது,'' என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டினார்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மற்றும் பெரம்பலுார், திருவாரூர் ஆகிய இடங்களில் திருமாவளவன் பிரசாரம் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது:

தி.மு.க., கூட்டணி வெற்றி பெறக்கூடாது; கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் ஓட்டு, அக்கூட்டணிக்கு சென்று விடக் கூடாது என திட்டமிட்டு, த.வெ.க., தலைவர் விஜயை அரசியல் களத்தில் பா.ஜ., இறக்கி விட்டுள்ளது. இதை யூகமாக நான் சொல்லவில்லை. காலாவதியான பல நிறுவனங்களில் முதலீடு செய்து, ஷேர் ஹோல்டராக விஜய் இருக்கிறார்.

அதில், ஒரு நிறுவனம் ஆர்.எஸ்.எஸ்., இயக்க நிறுவனம். ஆர்.எஸ்.எஸ்.,காரர்களோடு விஜய்க்கு நெருக்கமான உறவு உள்ளது. அப்படி என்றால், பா.ஜ.,வுடனும் உறவு என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. கூட்டணிக்கு விஜய் அழைத்தும், இந்த திருமாவளவன் போகவில்லை என்பதற்கான காரணம் இப்போது புரிகிறதா?

கட்சி ஆரம்பித்த மூன்று ஆண்டுகளில், தி.மு.க., வெறுப்பு பற்றியே விஜய் பேசியுள்ளார்; மோடி, அமித் ஷாவை விமர்சித்து இருப்பாரா? அல்லது ஜனநாயகன் படத்தை தடை செய்தது பா.ஜ., என சொல்லியிருக்கிறாரா? அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணியை வெற்றி பெற வைத்து, ஆட்சியில் அமர வைப்பது தான் விஜயின் நோக்கம்.

தி.மு.க.,வை வெல்ல முடியாது என விஜயை இறக்கி விட்டுள்ளனர். ஓட்டை பிரித்து, பா.ஜ., - அ.தி.மு.க.,வை, ஜெயிக்க வைப்பதே விஜயின் நோக்கம். முஸ்லிம் இளைஞர்கள், விஜய்க்கு ஓட்டு சேகரிக்கின்றனர். இது தான் மோடியின் திட்டம். பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்ததன் வாயிலாக, முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் ஓட்டு தேவையில்லை என வெளிப்படையாக பழனிசாமி முடிவு எடுத்து விட்டார்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement