மலைவாழ் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்; அருண்குமார் வாக்குறுதி
பெ.நா.பாளையம்: ஆனைகட்டி பழங்குடியின மக்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் தொடர்ந்து வழங்கப்படும் என, கவுண்டம்பாளையம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் அருண்குமார் உறுதி அளித்தார்.
கவுண்டம்பாளையம் தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளராக அருண்குமார் போட்டியிடுகிறார். இவர் ஆனைகட்டி, சேம்புகரை, தூமனூர், கே.கே. நகர், மாங்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாழும் பழங்குடியின மக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
ஆனைகட்டி பகுதியில் உள்ள பழங்குடியின மக்களுக்காக, 105 தொகுப்பு வீடுகள் புதுப்பித்து கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. துாமனூர் முதல் சேம்புக்கரை பகுதிக்கு, ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிதாக தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆதிவாசி மக்கள் போக்குவரத்துக்காக ஆனைகட்டி ஆலமரமேடு முதல் பனப்பள்ளி வரை பேட்டரி கார் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அ.தி.மு.க., ஆட்சி அமைந்தவுடன், இரண்டு லட்சம் பயனாளிகள் பயன்பெறும் வகையில் கறவை மாடு, ஆடுகள் வழங்கும் திட்டம் தொடங்கப்படும்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் விலையில்லா அரிசியோடு, ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் விலை இல்லாமல் வழங்கப்படும்.
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தொழில் துவங்க ஒரு நபருக்கு, 10 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.
100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டம், 150 நாட்களாக உயர்த்தி வழங்கப்படும். வேளாண்மை பயிர் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அரசு மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்ந்துள்ளவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் இருதய அறுவை சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சைகளுக்கான அனைத்து தொகையும் அரசே செலுத்தும். இது போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு, அருண்குமார் பேசினார்.
பிரசாரத்தில், பா.ஜ., பா.ம.க., அ.ம.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.